ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜெசிந்தா முதல் ஜெயலலிதா வரை… அதிகாரப் பொறுப்பில் பெண் தலைவர்கள்… ஒரு ரீவைண்ட்!

ஜெசிந்தா முதல் ஜெயலலிதா வரை… அதிகாரப் பொறுப்பில் பெண் தலைவர்கள்… ஒரு ரீவைண்ட்!

ஜெசிந்தா ஆர்டர்ன்

ஜெசிந்தா ஆர்டர்ன்

Jacinda Ardern | இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் 2007 ஜூலை 25 முதல் 2012 ஜூலை 25 வரை பதவி வகித்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • international, IndiaNew ZealandNew ZealandNew Zealand

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த 42 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன், அந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்து நாட்டில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டது அந்நாட்டின் அரசியல் களத்தை அதிர வைத்தது.

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்றும், சர்வதேச அடையாளமாகவும் பார்க்கப்பட்ட ஜெசிந்தா ஏன் திடீரென பதவி விலகினார், இடைக்கால பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நியூசிலாந்தில் ஜெசிந்தாவின் செல்வாக்கு சரிவே அவரது ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால், கொரோனா நோய்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பல நெருக்கடியான சூழலை சமாளித்த பெண் தலைவர் என பலரால் போற்றப்பட்டார். கடந்த 2019-ல் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்திலும் தளராது தனது நாட்டை வழிநடத்தினார் ஜெசிந்தா ஆர்டர்ன். மேலும், தான் பதவியேற்ற அடுத்த ஆண்டில் அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, பதவிக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாவது உலகத்தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், தான் பிரதமராக பதவி விலகியது மட்டுமின்றி, ஆளும் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வரும் பிப்ரவரி 7ஆம் தேதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

மற்றொரு பக்கம், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்ததை காங்கிரஸ் கட்சி வரவேற்றது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இவரைப் போன்றவர்கள்தான் இந்திய அரசியலில் அதிகம் தேவை’ என்றும் தெரிவித்துள்ளார். ஜெசிந்தா பதவி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் கல்வி மற்றும் காவல்துறை அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1946ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக பெண் தலைவர்கள் கொண்ட நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. உலகில் உள்ள 193 நாடுகளில் 125 நாடுகளில் இதுவரை ஒரு பெண் தலைவர் கூட ஆட்சி பொறுப்பு வகித்ததில்லை என Council on Foreign Relations-ன் புள்ளி விவரம் சொல்கிறது. மேலும், 68 நாடுகளில் ஒரு பெண் தலைவராவது இதுவரை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளார் எனவும், மறுபுறம், 193 நாடுகளில் 27 நாடுகளில் மட்டுமே தற்போது பெண்கள் அரசாங்கத்தின் தலைவர்களாக பதவியில் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரம் சொல்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, 1966 ஜனவரி 24 முதல் 1977 ஏப்ரல் 24 வரை இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தார். அதன் பின் மீண்டும் 1980 ஜனவரி 15 முதல் 1984 அக்டோபர் 31 வரை, அதாவது தான் மரணமடையும் வரை பதவி வகித்து மறைந்தார். இந்திரா காந்திக்கு மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தனது தந்தையும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவுக்குப் பின் இந்தியாவின் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்த ஒரே தலைவர் அதுவும் பெண் தலைவர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பு.

அதன் பிறகு, நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் 2007 ஜூலை 25 முதல் 2012 ஜூலை 25 வரை பதவி வகித்தார். அவருக்குப் பின், இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக கடந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி திரௌபதி முர்மு பதவியேற்றார். இவர் இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் ஆவார்.

உலகிலேயே இதுவரை அதிக பெண் தலைவர்களை கொண்ட நாடு என்றால் அது ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஃபின்லாந்து ஆகும். இந்தியாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வசந்தரா ராஜி, மாயாவதி, உமா பாரதி, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்‌ஷித் என 15க்கும் மேற்பட்ட பெண்கள் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளனர். இதில், தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும்தான் நாட்டின் ஒரே பெண் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: India, New Zealand