Home /News /international /

மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? சீனாவின் எச்சரிக்கைக்கு ஐ.நா பதில்

மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? சீனாவின் எச்சரிக்கைக்கு ஐ.நா பதில்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கைவிடுத்துள்ள நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பின் தாக்கம் தற்போதும் இருந்துவருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் எதுவும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என்று பாதிப்பு தொடர்ந்துவருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் உலகம் முழுவதும் சிக்கித் திணறியது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின்போது பாதிப்பின் தாக்கம் கோரத் தாண்டவம் ஆடியது.

    இந்தநிலையில், கொரோனாவின் புதிய திரிபான தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய ஓமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் என்று மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், சீன விஞ்ஞானிகளின் எச்சரிக்கை உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வளைகுடா நாடுகளில் கடந்த 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் `மெர்ஸ்' என்ற வைரஸ் நோய் பரவியது. மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்பதன் சுருக்கமே ‘மெர்ஸ்’. ஜுரம், இருமல், அதன்பின் சுவாசக் கோளாறு என்று பிரச்னை தீவிரமாகும். கொரோனா வைரஸ் போன்ற குணங்கள் கொண்ட ‘மெர்ஸ்-கோவ்’ (MERS-CoV) என்ற வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் அது. கொரோனா போலவே இதுவும் வௌவால்களில் இருந்த வைரஸ் தான்.

    ஓமைக்ரான் கடைசி கோவிட் வேரியண்ட் இல்லை - WHO நிபுணர் கருத்து..



    வௌவால்களிலிருந்து ஒட்டகங்களுக்குப் பரவி எப்படியோ ஒரு கட்டத்தில் மனிதர்களை வந்து அடைந்துவிட்டது. மெர்ஸ் நோயை உண்டாக்கிய வைரஸுக்கு வேகமாகத் தொற்றும் தன்மை இல்லை. அதனால் சில நாடுகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பரவி, அப்படியே காணாமல் போய்விட்டது. ஆனாலும், அது தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்தார்கள்.


    இந்த மெர்ஸ்-கோவ் வைரஸைப் போன்ற உருமாற்றம் கொண்ட ஒன்றாகவே நியோகோவ் வைரஸை சீன விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆனால், "இது கொரோனா போல வேகமாகப் பரவும். மெர்ஸ் வைரஸ் போல மரணத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த வைரஸ் உலகம் முழுக்கப் பல நாடுகளில் வேகமாகப் பரவி, பேரழிவை ஏற்படுத்தக்கூடும்’ என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் வௌவால்கள் மத்தியில் இந்த நியோகோவ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் விலங்குகள் மத்தியில் மட்டுமே பரவி வருகிறது. தற்போது இருக்கும் வடிவில் இந்த வைரஸ் இருக்கும் வரை இது மனிதர்களைத் தொற்றும் அபாயம் இல்லை. கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவும் நேரத்தில், அதன் என்சைம்களில் சிலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு உருமாற்றம் இந்த நியோகோவ் வைரஸில் ஏற்பட்டால், அதன்பின் பேரழிவைத் தடுக்க முடியாது என்பதே சீன விஞ்ஞானிகளின் அச்சமாக உள்ளது. இருப்பினும், நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே தெரிகிறது. நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்து கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி