இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயித்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அந்நாளே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இன்றைய தினம் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாத பேராலயத்தில் நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது ஏசுகிறிஸ்து உயிர்தெழும் காட்சி தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும் ஜெருசலேமில் உள்ள புனித செபுல்கர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்திற்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஈஸ்டர் தினத்தையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு தனது மனமார்ந்த ஈஸடர் தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மனித குலத்தின் மீட்பராக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, அன்பு, அமைதி, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனித இனத்தை ரட்சிப்பதற்கான பாதைக்கு ஒளியூட்டிவர் என தெரிவித்தார்.