சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டூடுல் வீடியோ வெளியிட்டு பெண்களை கவுரவித்த கூகுள் நிறுவனம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டூடுல் வீடியோ வெளியிட்டு பெண்களை கவுரவித்த கூகுள் நிறுவனம்

சர்வதேச பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தில் பெண்களை கவுரவப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களே வரலாற்றில் முதன்மையானவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

  • Share this:
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தில் பெண்களை கவுரவப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களே வரலாற்றில் முதன்மையானவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. பல இக்கட்டான நிலைமைகளை தாண்டி கல்வி, சிவில் உரிமைகள், அறிவியல், கலை, விண்வெளித்துறை, அரசியல் என பல துறைகளில் சிறந்து விளங்கிய பெண் முன்னோடிகளை இந்த டூடுல் வீடியோ எடுத்துக்காட்டியுள்ளது. சில பெண்கள் அற்புதமான புதிய இலக்கை வெகு விரைவில் அடையும்போது, ​​மற்றவர்கள் தங்களது அங்கீகாரம் அல்லது உரிமையை நீண்ட கால தாமதத்திற்கு பிறகு பெறுகிறார்கள். அதன்படி இன்றைய டூடுல் உலகெங்கிலும் உள்ள சாதனைப் பெண்களைக் கொண்டாடுகிறது.

அவர்கள் நீடித்த பாரம்பரியத்தை உருவாக்க தங்கள் காலத்தின் தடைகளைத் தாண்டி, சஃப்ராகிஸ்டுகள், கல்வியாளர்கள், தங்கப் பதக்கம் வென்றவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல துறைகளில் வெற்றியாளர்களாக ஆனார்கள். கடந்த காலம் முதல் தற்போது வரை தடைகளை தாண்டி தங்களுக்கென ஒரு அடித்தளத்தை அமைத்த எண்ணற்ற பெண்களின் முயற்சிகளை டூடுல் வீடியோ கவுரவித்துள்ளது. மேலும் டூடுல் வீடியோ கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் கையை உயர்த்தும் வெற்றி சின்னத்தை இறுதியாக காண்பிக்கிறது.

41 விநாடிகள் கொண்ட இந்த டூடுல் வீடியோ பெண்களின் போராட்டத்தின் முழு வரலாற்றிற்கும் நியாயம் செய்ய முடியாது தான். ஆனால் இது உலகெங்கிலும் உள்ள பெண்களின் சில கதைகளை எடுத்துக்காட்டுகின்ற ஒரு சக்திவாய்ந்த குறுகிய கிளிப் ஆகும். இந்த வீடியோ டூடுலை இல்லஸ்ட்ரேட்டர்- ஹெலன் லெரூக்ஸ் (Helene Leroux) என்பவர் உருவாக்கியுள்ளார். உலகளாவிய கூகுள் முகப்புப்பக்கங்களை அலங்கரிக்கும் படங்களை உருவாக்க தனது சொந்த பாட்டியிடமிருந்து உத்வேகம் பெற்றதாக கூறியுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள தனது சொந்த தொழிலில் ஒரு அனிமேட்டராக பணிபுரியும் இவரும், அந்த மிகக் குறுகிய கிளிப்பில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

"பெண்கள் முதன்மையானவர்கள்" என்ற தீம்மை மையப்படுத்தி இந்த டூடுல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹெலன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ``நான் குழந்தையாக இருந்த போது என் பாட்டி வரைந்ததை நினைவில் வைத்திருக்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞர். ஆனால் அவர் ஒருபோதும் கலையை தொழில் ரீதியாக தொடர அனுமதிக்கப்படவில்லை” என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, "கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்து காலத்திலும் உள்ள பெண்களுக்கும் மரியாதைக்குரிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

1911-ம் ஆண்டில் இருந்தே உலக அளவில் பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள், ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள். ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறாள். எனவே மகளிர் தினத்தில் மட்டும் அவர்களை பற்றி சிந்திக்காமல், ஒவ்வொருநாளும் அவர்களின் சிந்தனைக்கும், உணர்வுகளுக்கும், திறமைகளுக்கு மரியாதையை கொடுப்போம் முன்னுரிமை அளிப்போம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: