ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை - குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை

குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை

உலகளவில் ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகம் முழுவதும் நிலவுரிமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடிய 212 பேர் கடந்த 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கடந்த ஆண்டில் கொலம்பியாவில் 64 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் 43 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு இப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 8-வது வந்துள்ளது.

குளோபல் விட்னஸ்  எனும்  சர்வதேச மனித உரிமை அமைப்பு கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக  உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வருகிறது.

சுரங்கப் பணிகள், அணைக் கட்டுமானப் பணிகள், வேட்டைத் தடுப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றை எதிர்த்து நேரடியாக களத்தில் போராடியவர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர்களை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் கொன்று வரும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றது.

குளோபல் விட்னஸ் அமைப்பு 2019-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை Defending Tomorrow என்ற பெயரில் அண்மையில் வெளியிட்டது. அவ்வறிக்கையில் கடந்த  2019ஆம் ஆண்டில் மட்டும் 21 நாடுகளில் நிலவுரிமைக்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் போராடிய  212 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது வாரத்திற்கு 4 பேர் என்ற கணக்காகும். கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கொலம்பியாவில் 64 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 43 பேர்  பிரேசிலில் 24 பேர் மெக்சிகோவில் 18 பேர் ஹோண்டுராசில் 14 பேர்  கொல்லப்பட்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் கொலம்பியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், மூன்றில் இரண்டு பங்கு கொலைகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்துள்ளதாகவும் அமேசான் காட்டைச் சார்ந்த பகுதிகளில் 33 கொலைகள் நடந்ததாகவும் பிரேசிலில் கொல்லப்பட்டவர்களில் 90% கொலையுண்டவர்கள் அமேசானை பாதுகாக்க போராடியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று உறுதி!

இந்த அறிக்கையின்படி சுரங்கப்பணிகளை எதிர்த்ததால் கொல்லப்பட்டவர்களே அதிகம். சுரங்கப் பணி சார்ந்த பிரச்னைகளில் மட்டும் 50 பேரும், வேளாண்துறை சார்ந்த பிரச்னைகளில் 34பேரும் இதில் 85% தாக்குதல் ஆசிய நாடுகளில் நிகழ்ந்தவையுமாகும்.காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக உறுதியேற்று உலக நாடுகள் இணைந்து பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் சுற்றுச்சூழல் காக்க போராடுபவர்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர். தொடர்ச்சியாக வனப்பகுதிகளில் வாழும் பூர்வகுடிகள் வெளியேற்றப்படுவதாலும், கொல்லப்படுவதாலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் உடைய ஒரு சமூகத்தை இழக்க நேரிடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவைப்  பொருத்தமட்டில் 2018-ம் ஆண்டு 23 பேர் கொலையுண்டதுடன் இப்பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த நிலையில் 2019-ம் ஆண்டில் 6 பேர் மட்டுமே கொல்லப்பட்டதால் பட்டியலில் 8 இடத்திற்கு நகர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் ஏரி ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக கொல்லப்பட்ட தந்தை மகனான, ராமர் மற்றும் நல்லத்தம்பி ஆகியோர் பெயர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்தமும், அமல்படுத்த திட்டமிடப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட இந்திய வனச் சட்டத்த்திருத்தமும் இந்தியாவின் பூர்வகுடிகளின் சட்ட உரிமை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தலாக்கும்படி அமைந்துள்ளதாக இவ்வறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் இந்தப் பிரச்னைகளின் தடுப்பதற்காக எந்த முனைப்பும்.காட்டாமல் இருப்பதாகவும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் மிகப்பெரிய அளவில் நிதியுதவி அளிக்கும் சர்வதேச வங்கிகள் கூட இக்கொலைகள் குறித்து அக்கறை இல்லாமல் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறது குளோபல் விட்னஸ் அமைப்பு.
Published by:Vinothini Aandisamy
First published: