ஹோம் /நியூஸ் /உலகம் /

“உணவு ஏற்றுமதிக்கு பாதுகாப்பு தாருங்கள்”…ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

“உணவு ஏற்றுமதிக்கு பாதுகாப்பு தாருங்கள்”…ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

வெலோதிமிர் ஜெலன்ஸ்கி

வெலோதிமிர் ஜெலன்ஸ்கி

உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு போதுமான மற்றும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • international, Indiaukraine

  உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு போதுமான மற்றும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் இன்று வரை 8 மாதங்களை கடந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஒட்டு மொத்தத்தில் உக்ரைன் உருக்குலைந்துள்ளது.

  சர்வதேச போர் விதிகளை மீறிவிட்டதாக ரஷ்யா மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் போரை தீவிரப்படுத்துவதிலேயே ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கி்டையிலான போரில் அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரஷ்யா-உக்ரைன் போரால் மற்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்குலக நாடுகள் பலவற்றில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த உணவுப் பற்றாக்குறையால் அந்த நாடுகளில் அன்றாட வாழ்க்கைச் செலவு வரம்பும் உச்சத்தை அடைந்துள்ளது.

  Read More : நடு இருக்கையை தேர்ந்தெடுத்தால் 2 கோடி பரிசு ... ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் அசத்தும் ஆஃபர்!

  ஏனென்றால் மேற்குலக நாடுகளில் மிக முக்கியமான உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடும் நாடு உக்ரைன். போரால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, உணவு தானிய ஏற்றுமதியும் முடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் உணவுப்பற்றாக்குறையால் தவித்து வருகின்றன.

  எதனால் ஏற்படுகிறது உணவு தட்டுப்பாடு?

  உலகின் கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல் உலகின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 70 விழுக்காடு இந்த இரு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மக்காச்சோளமும் இந்த இருநாடுகளின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். அதே போல் உலகின் மிக முக்கியமான மற்றும் முதன்மையான உரப் பொருள் தயாரிப்பாளராக ரஷ்யா திகழ்கிறது. இப்படி இருக்கையில் எட்டு மாதங்களைக் கடந்து நடைபெற்று வரும் போரால் இரு நாடுகளில் இருந்தும் உணவு தானியம் மற்றும் உரங்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது.

  இதனால் கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றை முக்கிய உணவுப் பொருளாக கொண்டுள்ள நாடுகள் உணவுப் பற்றாக்குறையை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மந்தமமைடைந்த பொருளாதாரத்தால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை சந்தித்துள்ள நிலையில், தற்போதைய போர் சூழல் உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதிகாரப் போட்டியின் விளைவாக ஏற்பட்டுள்ள போரால் போர் முனையில் இருக்கும் வீரர்களைப் போலவே மற்ற நாடுகளில் இருக்கும் சாமானிய மக்களும் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக உலக நாடுகள் வேதனை தெரிவி்க்கின்றன.

  போர் சூழலால் உக்ரைனில் சுமார் 20 மில்லியன் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் துறைமுகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த உணவு தானியங்கள், மத்திய கிழக்கு, வட ஆப்பரிக்க மற்றும் சில ஆசிய நாடுகளின் உணவு ஆதாரங்கள். ஆனால் யாருக்கும் பயன்படாமல் உணவு தானியங்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உக்ரைனின் உணவு தானியங்களை நம்பி சுமார் 40 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிக மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடிக்குமானால் 41 நாடுகளில் இருக்கும் சுமார் 18 கோடிப் பேர் மிக மோசமான பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கவலை தெரிவிக்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை பாதுகாப்பு அமைப்பு.

  Read More : 85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு

  இந்த நிலையில் தான் உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு நிரந்தர மற்றும் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனின் கருங்கடல் பகுதி துறைமுகங்களில் இருந்து உலகின் மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு ஒத்துழைப்பதாக ஏற்கனவே துருக்கி அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதற்கும் ரஷ்ய முட்டுக்கட்டை போட்டுவருகிறது. கருங்கடல் பகுதிகளில் இருக்கும் ரஷ்ய போர் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகனைகளால் பயணிகள் கப்பலோ, சரக்கு கப்பல்களோ தாக்கப்பட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல என ரஷ்ய மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் உணவு தானிய ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  தனது பிராந்திய நாட்டாண்மைத் தனத்தை நிரூபிக்க முயலும் முயற்சியில் தங்கள் நாடு பாதிக்கப்படலாம்… ஆனால் மற்ற நாடுகளில் உள்ள அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துத் தான் தங்களின் மிருக பலத்தை பிரகடனப்படுத்த வேண்டுமா? என பசியோடு சில வாய்கள் கேட்கும் கேள்விகளை புதினின் காதுகளை எட்டுமா?…

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Russia - Ukraine, Trending