பிரான்சிஸில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் 4 வாரங்களுக்கு ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் 2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா இன்னும் தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டு வருகிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், உருமாறிய நிலையில் மீண்டும் கொரோனா பரவி வருவதாக வெளியாகும் செய்தி மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் பல்வேறு உருமாறிய நிலைகளை அடைவது, கொரோனா வைரஸ் ஒழிப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸில் மீண்டும் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (JHU) வெளியிட்ட தகவலின்படி, பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 42,41,959 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 91,833 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதங்களில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடுமையான ஊரடங்கு நடைமுறைக்கு பின்னர் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. தற்போது திடீரென நாளொன்றுக்கு முப்பதாயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடும் போது குணமடைவோரின் எண்ணிக்கை பிரான்சில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.
இதுகுறித்து அந்நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், பிரான்ஸின் அடுத்த ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக கூறினார். தற்போது பரவி வரும் கொரோனா எதிர்பார்ப்பதைவிட அதிகமாக பரவி வருவதாகவும், மக்கள் மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 3 வது அலை கொரோனா உருமாறிய வடிவில் மிகவும் வேகமாக பரவுவதாக தெரிவித்த அவர், கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாக கூறினார். ஊரடங்கானது பாரீஸ், நீஸ் உள்ளிட்ட 16 பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை விட சற்றே தளர்வுகளுடன் கூடியதாகும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியாக அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரலாம். ஆனால் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று பார்ட்டி செய்வது, கூட்டாக மக்களை சந்திப்பது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also read... காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது கோவிட்-19 வைரஸை குணப்படுத்துமா.? தீவிர ஆய்வில் எய்ம்ஸ் விஞ்ஞானிகள்
எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலிருந்த படியே அலுவலகப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. வெளியில் வருவதற்கு அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல முடியாது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும் எனக் கூறியுள்ள பிரானஸ் அரசு, அத்தியாவசிய கடைகளும் செயல்படும் என கூறியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.