Home /News /international /

அமெரிக்க படைகள் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் - போர் பதற்றம்

அமெரிக்க படைகள் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் - போர் பதற்றம்

ராக் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதபோதிலும் அப்பிராந்தியத்தில் மீண்டும் போர்ப்பதற்றம் தொற்றி்க் கொண்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த போர் நெருப்பு, ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலேமானியை ஏவுகணை வீசி அமெரிக்கா கொன்றதால் வெடித்தது.

அதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரு அமெரிக்க விமானப் படைத்தளங்கள் மீது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக ஈரான் கூறியபோதும் அதை அமெரிக்கா மறுத்தது. இதனிடையே, ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உள்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

ஈரான் ராணுவ தாக்குதலில் சொந்த நாட்டைச் சேர்ந்த 82 பேர் உயிரிழந்ததை அறிந்த அந்நாட்டு மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களை அடக்க பாதுகாப்புத்துறையினரும்.. போலீசாரும் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஈரானுக்கான பிரிட்டன் தூதர் டோம்னிக் ராப் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி என்பதாலேயே பங்கேற்றதாகவும் அது போராட்டமாக மாறும் என தனக்குத் தெரியாது என்றும் துாதரக அதிகாரிகளை கைது செய்வது சட்டவிரோதம் என்றும் டுவிட்டரில் கூறியுள்ளார் ராப். இதனிடையே இங்கிலாந்து தூதரகத்தை மூடவேண்டும் எனக் கோரி, போராட்டம் வெடித்தது.

ஈரானில் நடைபெறும் போராட்டங்களை உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் ஈரான் மக்களை அரசு கொல்லக்கூடாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே போருக்கான முயற்சியை கைவிடுவதே அமெரிக்காவுடனான பதற்றத்தை குறைக்க உதவும் என கத்தார் அதிகாரிகளிடம் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கருத்து கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈராக்கில் அல்-பலத் விமானப்படைதளத்தின் மீது நேற்று இரவு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பாக்தாதில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தளத்தின் ஓடுபாதையிலும், நுழைவாயில் கதவிலும் சில ராக்கெட்டுகள் விழுந்ததாகவும் அதில் 4 ஈராக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்து ஈராக் வாங்கிய எப்-16 ரக விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இத்தளம் அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். எனினும் கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்குப் பின் 90 சதவீத வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், 15 வீரர்கள் மட்டுமே அங்கிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்காவிட்டாலும் ஈராக்கில் இது மீண்டும் போர்ப் பதற்றத்துக்கு வித்திட்டுள்ளது.
Published by:Yuvaraj V
First published:

Tags: US-Iran Tensions

அடுத்த செய்தி