வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜெர்மனி.. பருவநிலை மாற்றமே காரணம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேதனை

ஜெர்மனி

பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என ஜெர்மனியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெஞ்சா சுல்சே தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜெர்மனியின் ஆர்வீலர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால், அப்பகுதி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

  சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிப்பதால் பலர் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெளியே வர முடியாத அளவுக்கு வீதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

  மேற்கு ஜெர்மனியின் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால், பேரிடர் மீட்புப்படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் கட்டடங்களும் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

  ரார் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், பல்வேறு பகுதிகள் தனித்தீவு போல மாறியிருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய 700 பேரை, மீட்பு படையினர் மீட்டனர்.

  ALSO READ |  பெருங்கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவி

  தொடர் மழையால் ரைன்லேண்ட் - பாலடினேட் நகரில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில், மின் விநியோகம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.  இவைதவிர பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். மொத்தம் 157 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதில் 133 பேர் ஜெர்மனியில் மட்டும் பலியாகியுள்ளனர்.  ஐரோப்பாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான வெள்ளம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 100க்கும் அதிகமானோர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) வெள்ளப் பகுதிகளை பார்வையிடவுள்ளார்.  ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால், இதுபோன்ற அதீத கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்படும் என்று காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என ஜெர்மனியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெஞ்சா சுல்சே தெரிவித்துள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: