ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மீன்பிடித்தல் போட்டி - 395 கிலோ டைகர் சுறாவை பிடித்ததால் சர்ச்சை!

சுறா

ஆஸ்திரேலியாவில் கடலில் நடைபெற்ற மீன்பிடித்தல் போட்டியில் 395 கிலோ எடை உள்ள சுறாவை மீனவர்கள் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
ஆஸ்திரேலியாவில் என்.எஸ்.டபள்யூ (NSW) மீன்பிடித்தல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த வாரத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மீனவ குழுவினர் பங்கேற்றனர். சிட்னி கடற்கரை பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் டார்க் ஹோர்ஸ் (Dark Horse ) குழுவினர் 395 கிலோ எடையுடைய சுறாவை பிடித்து அசத்தினர். கேப்டன் பால் பார்னிங் (Captain Paul Barning ) தலைமையிலான இந்தக் குழு பாட்னி பே மற்றும் ஹேங்கிங் துறைமுகத்துக்கு இடையிலான பகுதியில் இந்த சுறாவை பிடித்துள்ளனர்.

முதலில் சுறாவை பிடித்த இந்தக் குழு, அதனை தங்கள் படகில் ஏற்றுவதற்கு சுமார் 45 நிமிடங்கள் போராடியுள்ளனர். ஒருவழியாக சுறாவை படகில் ஏற்றியபிறகு, போர்ட் ஹேக்கிங் துறைமுகத்தை அந்தக் பால் பார்னிங் குழுவினர் அடைந்தனர். பின்னர், அந்த சுறா கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி மேற்கொள்ள கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் டைகர் சுறாவை (Tiger shark) பிடித்து படகில் ஏற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் கடும் சர்ச்சையை அந்நாட்டு சமூகவலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பலரும் டைகர் சுறாவை பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிரான நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் போட்டியை நடத்திய குழுவினர் மீதும், சுறாவை பிடித்த கேப்டன் பால் பார்னிங் குழுவினர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பெரும் சர்ச்சையை உருவாக்கியிருப்பதால், போர்ட் ஹேக்கிங் பிஷ்ஷிங் கிளப் (Hacking Game Fishing Club), அந்த புகைப்படத்தை தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய மீன்பிடித்தல் போட்டியை ஏற்பாடு செய்த குழுவினர் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும், மிரட்டல்களும் வருவதாக தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் கடலில் மீன்பிடித்தல் போட்டியை நடத்தக்கூடாது என பலர் கூறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதபோல், மற்றொரு புகைப்படத்தில் அண்டர்டேக்கர் என்ற குழுவினர் 340 கிலோ எடையுடைய ராட்சத சுறாவை பிடித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர்கள், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வியலை பாதிக்கக்கூடிய சுறா பிடிக்கும் போட்டிகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு சுற்றுச்சூழலியல் பிரச்சனைகளை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற போட்டிகள் அதனை மேலும் மோசமாக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், சுறாவை பிடித்துக் கொள்வதில் அப்படி என்ன சுவாரஸ்யத்தைக் கண்டுவிடப் போகிறீர்கள் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.
Published by:Ram Sankar
First published: