பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் தான் இம்ரான் கான் பிரதமர் நாற்காலியில் அமர முடிந்தது, ஆனால் இப்போது இருதரப்புக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் இம்ரான கானை தூக்கி விட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ரத்தனக் கம்பளம் விரித்துள்ளது பாகிஸ்தான் ராணுவம்
இது தொடர்பாக சிஎன்என் நியூஸ்-18 ஊடகத்துக்கு தகவல்களைப் பகிர்ந்து கொண்ட தரப்பினர் கூறும்போது, ஷெரீப்பிடம் பாகிஸ்தான் திரும்புமாறும், இங்கு அவர் தேவைப்படுவதாகவும் மெசேஜ் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இம்ரான் கானுக்கும் ராணுவத்துக்குமான அதிகார மோதலில் பாகிஸ்தான் ராணுவம் இம்ரான் கான் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.
நவாஸ் ஷெரீப் இரண்டு முக்கிய ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர், அவென்பீல்ட் ப்ராப்பர்ட்டீஸ், அல் அஜீஜியா ஸ்டீல் மில்ஸ் வழக்கில் இவர் குற்றவாளியாக இஸ்லாமாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. 2018-ல் மற்றொரு கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதே ஆண்டில் அல் அஜீஜியா ஸ்டீல் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் ஷெரீப்.
ஆனால் நவம்பர் 2019 முதல் லண்டனில் இருந்து வருகிறார் நவாஸ். மருத்துவ சிகிச்சைக்காக இவர் லண்டன் செல்லலாம், 4 வாரங்கள் அனுமதி என்று லாகூர் கோர்ட் அனுமதியளித்தது.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் திரும்ப ராணுவம் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகவும் இதனையடுத்து இம்ரான் கான் தானாகவே ராஜினாமா செய்ய நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நவம்பர் 20ம் தேதிக்குள் பிரதமர் பதவியை இம்ரான் கான் உதற வேண்டும். அப்படி இல்லையெனில் எதிர்க்கட்சிகள் மாற்றம் கொண்டு வரும். எப்படியிருந்தாலும் இம்ரான் கதை அவ்வளவுதான் என்கின்றனர் பாக். அரசியல் வட்டாரங்கள்.
இதற்கு முன்னோடியாக வரும் வாரத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியுடனான அரசியல் கூட்டணியை முத்தகிதா குவாமி இயக்கமும் பாகிஸ்தான் முஸ்லிம் லீகும் முறியடித்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
மேலும் இம்ரான் கான் ஆட்சியில் பொருளாதார மட்டத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதோடு பொருளாதாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதோடு ராணுவத்துடன் அதிகார மோதல் வேறு உள்ளதால் இம்ரான் கான் பிரதமர் பதவி விரைவில் பறிபோகும் என்றே கூறப்படுகிறது .
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.