மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழுகை அறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா ஆடிய ருத்ரதாண்டவத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பெரும் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் இழப்பு அல்லது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், மனதுக்கு நெருக்கமானவர்களின் இழப்பு மற்றும் பொருதார பாதிப்பு, வேலையிழப்பு, கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனை பிறரிடம் மனம் விட்டும் பேசுவதில்லை அல்லது பேச முடியாத சூழல் இருப்பதால், மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி தீவிர மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.இந்த பாதிப்புகள் குறித்து அக்கறை கொண்டுள்ள ஸ்பெயின் அரசு, அழுகை அறையை (Crying Room) அறிமுகப்படுத்தியுள்ளது. அழுகை அறைக்கு உங்களை வரவேற்கிறோம் என்ற வாசகத்துடன், மக்களை வரவேற்கிறது. அறைக்குள் ஒரு தொலைபேசி இருக்கும், அந்த தொலைபேசி மூலம் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அழைக்கலாம்.
உங்களுக்கு மன வருத்தம் இருக்கும் நபர்கள், பிரச்சனைக்குரிய நபர்களை தொலைபேசியில் அழைத்து தங்களின் மன ஆதங்கத்தைத் கொட்டித் தீர்த்துக் கொள்ளலாம். திறந்த மனதுடன் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் வகையில் அங்கே கண்ணீர்விட்டு, சத்தமிட்டு அழுது கொள்ளலாம். மன நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு வேண்டுமானால், அந்த தொலைபேசியிலேயே அழைத்து, உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
24 மணி நேரமும் இயங்கும் இந்த அழுகை அறைக்கு ஸ்பெயின் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நாடு தழுவிய மனநல பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார். அதற்காக 100 மில்லியன் யூரோ நிதி ஒதுக்குவதாக கூறிய அவர், மனநலப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை எட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அறிவித்தார்.
அரசின் இந்த திட்டம் குறித்து பேசிய மாணவர் ஒருவர், இந்த நடவடிக்கையை முழுமனதுடன் வரவேற்பதாக தெரிவித்தார். தங்கள் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளியில் பேச முடியாத சூழலில், இந்த அறை முழுமையாக தங்களின் குரலை கேட்பதாக கூறினார். வெளிப்படையாக பேசியவுடன் அல்லது மனக்குறைகளை கொட்டியவுடன், மனதில் பெரும் நிம்மதி ஏற்படுவதை தன்னால் உணர முடிந்ததாக அவர் தெரிவித்தார். இதேபோல், பலரும் அழுகை அறைக்கு படையெடுக்கின்றனர்.
எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மன நல ஆலோசர்களிடம் முறையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்கின்றனர். அந்நாட்டில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், ஸ்பெயினில் வசிக்கும் மாணவர்களில் 10ல் ஒருவர் மன நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 3,671 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5.8 விழுக்காட்டினர் மன நலப்பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தற்கொலையைத் தடுக்கவும், மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உலகளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.