இங்கிலாந்தின் பிராட்ஸ்டேர்ஸைச் சேர்ந்த நிக்கோல் எல்கபாஸ் என்பவர். இவர் தனக்கு கருப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவை என்று கூறியும் GoFundMe என்ற பெயரில் இணையத்தில் கிரவுட்ஃபண்டிங் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். 42 வயது நிரம்பிய பெண்ணின் நிலையை கண்டு ஏமாந்துபோன மக்களும், சிகிச்சைக்காக பணத்தை வழங்க தொடங்கியுள்ளனர். அதன்படி சுமார் 700 பேர் அளித்த நிதி மூலம் சுமார் 52,000 யூரோ டாலர்களுக்கும் அதிகமான பணம் நிக்கோலின் சொந்த வங்கிக் கணக்கிற்கு வந்தது. இவ்வாறு மோசடி செய்து திரட்டிய பணத்தை சூதாட்டத்திற்கும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் செலவழிக்க தொடங்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018 ஆகஸ்டில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பல தேடல்களுக்கு பிறகு சமீபத்தில் எல்கபாஸ் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த பெண்மணி சமீபத்தில் ஒரு டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போட்டியைக் காண 3,592 டாலர்கள் மதிப்புள்ள சொகுசு பெட்டியை வாங்கியதாக Daily Mail பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை செய்ததில் எல்கபாஸின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இவர் தனது நிதி திரட்டும் பக்கத்தில் ஒரு மருத்துவமனையின் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி, தான் ஸ்பெயினில் சிகிச்சை பெறுவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அந்த புகைப்படம் உண்மையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சம்பந்தமில்லாத நோயால் பாதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று சுகாதார ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். விசாரணையின்போது தனக்கு புற்றுநோய் இருப்பதாக அவர் தொடர்ந்து கூறினாலும், சில நன்கொடைகளை சூதாட்டத்திற்காக செலவிட்டதாக ஒப்புக்கொண்டார். அவர் ஆயிரக்கணக்கான கடன்களை அடைப்பது, பயணம் செய்வது மற்றும் பிரீமியர் லீக் சீசன் டிக்கெட்டுகளை வாங்குவது போன்ற சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும் தன் புற்றுநோய்க்கு சிகிச்சையளித்ததாக சில மருத்துவர்களை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படியொரு பெயரில் மருத்துவர்களும் இல்லை. அவர் சிகிச்சை பெற்றதற்கான எந்த பதிவும் இல்லை என்றும் போலீசார் கண்டறிந்தனர். தற்போது கென்ட் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்க்கு இடையில் பணம் பெற புற்றுநோய் இருப்பதாகக் கூறி தவறாக பிரதிநிதித்துவம் செய்தது மற்றும் தொண்டு நன்கொடைகள் தொடர்பாக குற்றவியல் சொத்துக்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகள் 'தொண்டு மனப்பான்மை கொண்ட பொது மக்களிடையே அவநம்பிக்கையை உருவாக்குகின்றன' என்றும், 'சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களில் கோபத்தை கூட ஊக்குவிக்கின்றன.' எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.