ஏவுகணை சோதனை மையங்களை அழிக்க வடகொரியா ஒப்புதல் - ட்ரம்ப்

news18
Updated: June 12, 2018, 10:05 PM IST
ஏவுகணை சோதனை மையங்களை அழிக்க வடகொரியா ஒப்புதல் - ட்ரம்ப்
கிம் ஜோங் உன் -டொனால்ட் ட்ரம்ப்
news18
Updated: June 12, 2018, 10:05 PM IST
வடகொரியா தன்னிடம் உள்ள மிகப்பெரிய ஏவுகணை சோதனை மையத்தை முற்றிலும் அழிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், எதிரிகள் இணைந்து செயல்பட முடியும் என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஏவுகணை எஞ்ஜின் சோதனை மையங்களை அழித்து வருவதாக வடகொரிய அதிபர் கிம் தெரிவித்தார். இது ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இது மிகப்பெரிய விஷயம். ஏவுகணை சோதனை மையங்கள் அனைத்தும் மிக விரைவில் அழிக்கப்பட்டுவிடும் என்றார்.

வடகொரியாவின் நன்மைக்காக மிக தைரியமான முடிவை எடுத்ததற்காக, அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு பாராட்டு தெரிவித்த ட்ரம்ப், இரு தலைவர்களும் புதிய அத்தியாத்தை எழுதுவதற்கு தயாராகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கொரிய தீபகற்பத்தில் நிகழ்ந்த போர் காரணமாக, அமெரிக்கர்கள் பலர் உயிரிழந்த நிலையில், தற்போதைய சந்திப்பு, எதிரிகள் இணைந்து செயல்பட முடியும் என நிரூபித்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.

இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்கிக் கொள்ளக்கூடாது என்ற ஒப்பந்தம் இருந்தபோதும், இதுவரை போர் நிற்கவில்லை. ஆனால், தற்போது இது விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். எதிர்காலத்தை கடந்த காலம் தீர்மானிக்க முடியாது. கடந்த கால சண்டைகள் மூலம் எதிர்காலத்தில் போர் ஏற்படும் எனக் கூற முடியாது. எதிரிகள் நண்பர்களாக முடியும் என்பதை வரலாறு மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

வடகொரியாவில் சிறைபிடிக்கப்பட்டு, மூளை பாதிப்பால் உயிரிழந்த அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒட்டோ வார்ம்பியரின் தியாகம்  வீண்போகவில்லை என இந்த சந்திப்பு நிரூபித்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Loading...
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ பயிற்சிகள் நிறுத்தப்படும் என்றும், வடகொரியா மீதான தடைகள் அனைத்தும் விரைவில் நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
First published: June 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...