ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் அந்த நாடு விரைவில் காணாமல் போய்விடும் என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது முன்னேறிய நாடாக ஜப்பான் உள்ளது. எனினும், மக்கள் தொகையில் அந்த நாடு பின்தங்கியுள்ளது. ஜப்பானில் மக்கள் தொகையில் தற்போது பெரும்பாலானோர் முதியவர்களாக உள்ளனர்.
வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அந்நாடு கடும் சிக்கலில் தவிக்கக்கூடும். ஜப்பானின் மக்கள் தொகையும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே செல்கிறது. அந்நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் உள்துறை விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள புள்ளியல் தரவுப்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜப்பானில் மக்கள் தொகை 6,44,000 குறைந்துள்ளது. இதுவரை இல்லாத வீழ்ச்சி இதுவாகும். தற்போது ஜப்பானின் மக்கள் தொகை 12.5 கோடியாக உள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக டோக்கியோ நகரில் மக்கள் தொகை 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ராஜபக்சே வெளிநாடு செல்ல திட்டம்? விமான நிலையம் அருகே காத்திருக்கும் இலங்கை மக்கள்
கடந்த 11 ஆண்டுகளாகவே ஜப்பான் மக்கள் தொகை வீழ்ச்சியை சந்தித்து வரும் சூழலில், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மிகப் பெரியதாக பார்க்கப்படுகிறது. அங்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் சதவீதம் 28.9% ஆக உள்ளது. அதேவேளையில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் சதவீதமோ 11.8% மட்டுமே உள்ளது.
இது தொடர்பாக உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், ஜப்பானின் இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் அதிகாரிக்கவில்லை என்றால் அந்நாடு காணாமல் போய்விடும். இது உலகிற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.