உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் சிஇஓவும் ஆன எலான் மஸ்க் அண்மையில் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் பிரதான பங்குதாரராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், நிர்வாகக் குழு உறுப்பினராக எலான் மஸ்க் மறுத்துவிட்டாதாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பிராக் அகரவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிராக் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எலான் மஸ்கை நிர்வாகக் குழுவில் சேர்க்க உறுப்பினர்களும் நானும் ஆலோசனை நடத்தினோம். நிர்வாகக் குழுவில் இணைய வேண்டும் என எலானிடம் நேரடியாக தொடர்புகொண்டு பேசி விருப்பத்தை தெரிவித்தேன். எலான் நிறுவனத்தின் முக்கிய நபராக இருந்து நிறுவனத்தின் மேன்மைக்கும் பங்குதாரரின் நலனுக்கும் துணை நிற்பார் என நாங்கள் நம்பினோம்.
எனவே, நிர்வாகக் குழுவில் இணைக்க முடிவெடுத்தாக நாங்கள் எலானிடம் கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தோம். ஆனால் நிர்வாகக் குழுவில் இணைய விருப்பம் இல்லை என எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். இதுவும் நல்லது என்றே கருதுகிறேன்.
நமது பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை நாம் பெற்றுக்கொள்ள எப்போதும் தயாராகவுள்ளோம். நமது பிரதான பங்குதாரரான எலான் மஸ்க்கின் பங்களிப்பை ட்விட்டர் நிறுவனம் என்றும் எதிர்பார்த்துள்ளது. நம்மை திசைதிருப்பும் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், நமது இலக்கு மற்றும் நோக்கங்களிலிருந்து விலகாமல் செயல்படுவோம்.
ஜார்கண்ட்டில் அந்தரத்தில் மோதிக்கொண்ட ரோப் கார்கள் - மூவர் பலி: பலர் 20 மணிநேரமாக சிக்கித் தவிப்பு
நமது முடிவுகளும் செயல்களும் நமது கையில்தான் உள்ளது. வேறு யாரிடமும் இல்லை. எனவே, தேவையற்ற சத்தங்களை கண்டுகொள்ளாமல், வேலையில் கவனம் செலுத்தி நிறுவனத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம்" என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் அதிரடிகள்
ட்விட்டர் நிறுவனத்தின் பிரதான பங்குதாரராக எலான் மஸ்க் வந்த பின்னர், பல்வேறு அதிரடி கருத்துக்களை அவர் பதிவிட்டுவருகிறார். ட்விட்டரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என சில கருத்துகளை பதிவிட்டு அதற்கு ட்விட்டர் பயன்பாட்டாளர்களிடம் கருத்துக் கணிப்பு கேட்டுவருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையிடத்தை வீடு இல்லாதவர்களின் குடியிருப்பாக மாற்றிவிடலாம். அங்கு யாரும் வந்து வேலை செய்வதாக தெரியவில்லை. ட்விட்டரில் எடிட் பட்டனை அறிமுகப்படுத்தலாமா? TWITTER என்ற பெயரில் Wஐ நீக்கி TITTER என மாற்றலாமா? ட்விட்டரில் பல பிரபலங்களின் அக்கவுண்டுகள் நீண்ட காலமாக ஆக்டிவாக இல்லை. எனவே ட்விட்டர் அழிந்து வருகிறதா? இப்படி பல்வேறு அதிரடி கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார் எலான் மஸ்க்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.