எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி, நீதிமன்ற விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி வெடித்ததால், அவர் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து 2012-ல் ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியைச் சேர்ந்த முகமது மோர்சி வெற்றிபெற்று அந்நாட்டின் 5-வது அதிபரானார்.
ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள முயன்றார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராராட்டத்தில் இறங்கினர். அப்போது, மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட அரசுக்கு 48 மணி நேரம் கெடு விதித்தது ராணுவம். கலவரத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறியதால், தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை சுற்றிவளைத்த ராணுவத்தினர் முகமது மோர்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பதவியேற்று ஓராண்டு முடிவதற்குள், ஆட்சி கலைக்கப்பட்டதால், எகிப்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அட்லி மன்சூர் (Adly Mansour) இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபவட்டர்கள் கொலை செய்ய தூண்டிவிட்டது, கத்தார் நாட்டிற்கு உளவு பார்த்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முகமது மோர்ச்சிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, மோர்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
67-வயதான இவர் சிறையில் இருந்த போது முறையாக உணவு வழங்கவில்லை என்றும், திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும் முஸ்லீம் சகோரத்துவக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, மாரடைப்பால் முகமது மோர்சி மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Also see... நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் சென்ற விஷால்!
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.