• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஈக்வடார் சிறையில் கேங் வார்... வெடிகுண்டுகள் வீசி நடந்த மோதலில் 70 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் சிறையில் கேங் வார்... வெடிகுண்டுகள் வீசி நடந்த மோதலில் 70 பேர் உயிரிழப்பு

போதைப் பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் 2 குழுக்கள் சிறைக்குள் சரமாரியாக மோதிக் கொண்டன. இரு குழுக்களும், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்கிக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறைக்குள் கைதிகளுக்கிடையே கலவரம் வெடித்தது. துப்பாக்கி, வெடிகுண்டுகளை பயன்படுத்திய நடந்த மோதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஈக்வடாரின் துறைமுக நகரமமான கயாகில் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அதிகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக கயாகில் உள்ளது. பொருட்கள், கார்கள் திருட்டு, போதைப் பொருள் வினியோகம், வீடு புகுந்து கொள்ளை என இங்கு நடக்கும் குற்றச் செயல்கள் நாடு முழுவதும் பிரபலமாக இருக்கிறது.

    இந்நிலையில், கயாகில் சிறைக்குள் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. போதைப் பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் 2 குழுக்கள் சிறைக்குள் சரமாரியாக மோதிக் கொண்டனர். இரு குழுக்களும், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்கிக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 70 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் அதிகமானோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    ஈக்வடார் நாட்டில் சிறைக்குள் கலவரம் நடப்பது என்பது அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் மட்டும் 300-க்கும் அதிகமானோர் சிறை கலவரத்தில் பலியாகி உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றால், ஈக்வடாரில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

    போதைப் பொருள் விஷயத்தில்தான் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்துள்ள கயாகில் சிறையில் 5,300 பேர் மட்டுமே அடைக்க முடியும். ஆனால் 8,500 பேர் கைதிகளாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாசோ கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: