தென்னாப்பிரிக்காவின் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க நாட்டில் தொடர் வெள்ள பாதிப்பு காரணமாக அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதி கடும் சேதமடைந்துள்ளது. தென்கிழக்கு கடற்கரை நகரமான டர்பனில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகள், சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவை கடும் சேதமடைந்துள்ளன.
அதேபோல கவாசுலு மற்றும் நாடால் பிராந்தியத்தில் வெள்ள அபாயம் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மின் இணைப்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், அந்நாட்டில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விழாக்களை மக்களால் வெள்ளம் காரணமாக முறையாக அணுசரிக்க முடியவில்லை.
also read : இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேவையைத் தொடங்குவோம் - ஜெட் ஏர்வேஸ் CEO தகவல்
வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள 35 லட்சம் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசா வரும் வாரம் சவுதி அரேபியாவுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக பயணத்தை ஒத்திவைத்துள்ளார். மேலும், மீட்பு பணிகளுக்காக அவசர நிதியுதவியை அரசு விடுவித்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்துறை நாடாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்
பெருந்தொற்று தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கி இருந்த நிலையில், தற்போது கோவிட் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு அந்நாட்டிற்கு அடுத்த சோதனையாக உருவெடுத்துள்ளது.
இந்த வெள்ள பாதிப்புக்கு கால நிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியப் பெருங்கடல் வெப்பம் அடைவதன் காரணமாகவே தென்னாப்ரிக்காவின் கடற்கரை பகுதிகளில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதை முன்னெச்சரிக்கையுடன் அணுகவில்லை என்றால் எதிர்காலத்தில் நிலைமை மோசம் அடையும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.