China: சீனாவில் 72% குறைந்த விவாகரத்துகள்... விவாகரத்து நடைமுறையில் சீன அரசு செய்த சிறிய மாற்றம் இது தான்!

மாதிரி படம்

2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் 296,000 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவே 2020ம் ஆண்டின் கடைசி காலாண்டில் 1.06 மில்லியன் ( 10 லட்சத்து ஆறாயிரம்) விவாகரத்து வழக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
அண்மையில் சீன அரசாங்கம் கொண்டு வந்த விவாகரத்து திருத்த சட்டத்தின் மூலம் அங்கு 72% அளவிற்கு விவாகரத்து வழக்குகள் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தது. விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அதில் சீர்திருத்தம் செய்வது என சீன அரசு முடிவெடுத்தது. இதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் விவாகரத்து பெறும் நடைமுறையில் சிறிய மாற்றத்தை சீன அரசு கொண்டு வந்துள்ளது.

கூலிங் பீரியட்:

புதிதாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்பவர்கள், மனு தாக்கல் செய்த பின்னர் ஒரு மாதத்திற்கு காத்திருப்பு நிலையில் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் இரு தரப்பினரும் மனம் மாறினால் தங்கள் மனுவை வாபஸ் பெறலாம்.

விவாகரத்து சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றத்திற்கு வியக்கத்தக்க வகையில் பலன் கிடைத்திருக்கிறது. அங்கு 72% அளவுக்கு விவாகரத்து வழக்குகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சீனாவின் சிவில் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் 296,000 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவே 2020ம் ஆண்டின் கடைசி காலாண்டில் 1.06 மில்லியன் ( 10 லட்சத்து ஆறாயிரம்) விவாகரத்து வழக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 72% சதவிகித குறைவாகும்.

அதே போல 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் 6,12,000 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆண்டுக்கு - ஆண்டு முறையில் கணக்கிடும் போது 52% அளவுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் விவாகரத்து வழக்குகள் குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவில் சில மாகாணங்களில் அமலில் உள்ள சட்ட நடைமுறை தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக கூறி இச்சட்டத்திருத்ததிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

திருமணம் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. திருமண விகிதத்தின் சரிவு பிறப்பு வீதத்தை பாதிக்கும், இது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களை பாதிக்கிறது என சிவில் விவகாரங்கள் அமைச்சக அதிகாரி Yang Zongtao கடந்த ஆண்டு இச்சட்டத்தை அமல்படுத்தும் முன்பாக தெரிவித்திருந்தார்.

Read More:    ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு விநோத தண்டனை - ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை!

சீன அரசு கொண்டு வந்த மாற்றத்திற்கு நல்ல அளவில் பலன் கிடைத்திருப்பதால் ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தாலும் ஒரு தரப்பினர் இதனை பாராட்டி வருகின்றனர்.

சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கூலிங் பீரியட், முன்னதாகவே சில நாடுகளில் அமலில் உள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் விவாகரத்திற்காக மனுதாக்கல் செய்தால் 2 முதல் 6 வாரங்களுக்கு காத்திருக்க வேண்டும்.
Published by:Arun
First published: