நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் பொதுவாக நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்துவரும் செவ்வாய்க்கிழமையிலேயே நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 3-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பில் இருபெரும் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பழமைவாதம் பேசும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப், மீண்டும் வென்று 4 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
தாராளமயத்தை கொள்கையாக கொண்ட ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக இருந்தவர் ஜோ பைடன். டிரம்ப் வெற்றி பெற்றால் தனது 74-வயதில் 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிப்பார். ஜோ பைடன் வென்றால் 78 வயதில் முதன் முறையாக அதிபராகும் நபர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும் படிக்க...இரண்டாவது முறையாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அமெரிக்க அரசியலமைப்பை பொருத்தவரை அதிகளவில் மக்களின் வாக்குகளை பெறுபவர் உடனடியாக அதிபர் ஆகிவிட முடியாது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் மொத்தம் 538 மாகாண பிரதிநிதிகளால், மறைமுகமாக அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலவை எனப்படும் செனட் சபை மற்றும் மாகாண பிரதிநிதிகள் சபை என இரு அவைகள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட் உறுப்பினர்களும், மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரதிநிதிகளும் தேர்ந்தெர்டுக்கப்படுவார்கள்.
ஏட்டளவில் பார்த்தால், பொதுத்தேர்தலில் பெரும்பாலான வாக்குகளை பெற்றவரையே பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும். ஆனால், பெரும்பான்மையை பெற 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற வேண்டும். கடந்த முறை பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றும், 227 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்ற ஹிலாரி கிளிண்டன், 304 பிரதிநிதிகளின் வாக்குகளை பெற்ற டிரம்ப்பிடம் தோல்வியடைந்தார்.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இணைந்த காங்கிரஸால் அமெரிக்க சட்டங்கள் இயற்றப்படுவதால், அவர்களை தேர்ந்தெடுப்பதிலும் மக்களின் முக்கிய பங்கு உள்ளது. பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். செனட்டர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்ற போதிலும், அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.
இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு, அதிபர் தேர்தலின் போதே தேர்தல் நடக்கும். அவர்களின் மொத்த கூட்டுத் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் இருக்கும்.
படிக்க...பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர கால அனுமதி: உயிரிழப்புகளை கட்டுப்படுத்த டிரம்ப் அரசு நடவடிக்கை..
18 வயது பூர்த்தியடைந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற யாரும் தேர்தலில் வாக்களிக்க முடியும். இருப்பினும் சில மாகாணங்களில் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டுமென சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தாலும், தபால் வாக்கு முறை அறிமுகமான பின் 2016-ல் 21 சதவீத தபால் வாக்குகள் பதிவாகின. கொரோனாவால் தபால் வாக்குப் பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரினாலும், அது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என டிரம்ப் கூறிவருகிறார்.
படிக்க...தேர்தல் பரப்புரையில் தனது "சித்தி"களை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ்
பொதுவாகவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க சில நாட்கள் ஆகும் என்ற நிலையில், இந்த முறை தபால் வாக்குகள் அதிகரிக்கும் என்பதால் மேலும் காலதாமதம் ஆகலாம் என கூறப்பட்கிறது.
ஒருவேளை தேர்தலில் ஜோ பைடன் வென்றாலும் அமைச்சர்கள் நியமனம், புதிய திட்டங்களை வகுப்பதற்கு கால அவகாசம் ஆகும் என்பதால் உடனடியாக பதவியேற்க முடியாது. புதிய அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்பார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Donald Trump, USA