சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா ஆகிய நாடுகளில் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தொடர்ந்து அதிகம் காணப்படுகிறது.
சீனாவின் மொத்த தினசரி பாதிப்பு நேற்று வரை 25 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்துவந்த நிலையில் இன்று தினசரி பாதிப்பு 26,155ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,529 பாதிப்புகள் அறிகுறியுடன் கூடியவை என்றும் 22,626 பாதிப்புகள் அறிகுறிகள் இல்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான பாதிப்புகள் அந்நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் பதிவாகியுள்ளன. ஷாங்காயில் மட்டும் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து சீனாவின் 44 நகரங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஷாங்காய் நகரில் மட்டும் சுமார் 2.5 கோடி மக்கள் முழு லாக்டவுனில் உள்ளனர்.
மலேசியா நாட்டில் ஒரே நாளில் 9,705 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்து 82 ஆயிரத்து 402ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 35,409 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆப்கான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழித் தாக்குதல் - பொது மக்கள் பலர் உயிரிழப்பு
தொடர்ந்து ஒரு லட்சம் தினசரி பாதிப்புகளை கண்டுவந்த தென் கொரியாவில் தற்போது பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய தினசரி பாதிப்பு 93,001 ஆக உள்ளது.சிகிச்சை பெறுவோரில் 893 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் தினசரி பாதிப்பு 22,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று உலகை விட்டு முழுமையாக நீங்க நீண்ட காலம் பிடிக்கும், எனவே உலக நாடுகள் விழிப்புடன் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.