கொரோனா வைரஸ் நோய் தொடர்ந்து உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையில் இருப்பதால், கொரோனா நோய் சார்ந்த தயார் நிலையை பராமரிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோசு அதானோம் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையாக பாதித்து வருகிறது. உலகம் தற்போது பெருந்தொற்றின் துவக்க காலத்தை தான் தாண்டியிருக்கிறது. கொரோனா வைரஸின் நிலைத்திருக்கும் தன்மை, அதன் பரவலின் அளவு, தீவிரத் தன்மை தற்போது வரை குறையவில்லை என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பான சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைவிதிகளின் (International Health Regulations 2005 - IHR) கீழ் 11வது பொது சுகாதார அவசர நிலை கூட்டம் முன்னதாக நடைபெற்றது . டெட்ரோசு அதானோம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை உலக நாடுகள் கைவிட்டு விட்டது வருத்தமளிக்கிறது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தொற்று பரிசோதனையை அதிகரிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெருந்தொற்றின் துவக்க காலத்தை தான் தாண்டியிருக்கிறோம். வைரஸ் இன்னமும் மிகப்பெரிய தொற்றாக உள்ளது. கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் 99.2% வகை ஓமிக்ரான் வகை தொற்றாகும். டெல்டா பாதிப்புகளின் எண்ணிக்கை 0.1%க்கும் குறைவாகவே உள்ளது.
கொரோனா உயிரிழப்புகளைத் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்து நிறைந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உலக நாடுகள் கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

7 நாட்கள் தொற்று பாதிப்பு நிலவரம்
உலகளவில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 7 லட்சமாக சரிந்துள்ளது. 22,000 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது, பெருந்தொற்று துவக்க காலத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட குறைவான எண்ணிக்கையாகும். இருந்தாலும், சில நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரம் அதிகரித்து வருவதை காண்கிறோம். எனவே, கொரோனா தொற்றுக்கு எதிரான தீவிர முனைப்பு காட்ட வேண்டும். அலட்சியம் காட்டாக கூடாது. இதனை நாங்கள் தீவிரமாக வலியுறுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
கொரோனா நிலவரம்: உலகளவில் கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பிஒய்.2 வகை தொற்று தற்போது
அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகமான பரவும் தன்மை, தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் இதனிடம் உள்ளன.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,317 பேருக்கு கொரோனா நோய்த் தோற்று கண்டறியப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதில், 95% பாதிப்புகள் ஷாங்காய் நகரில் உள்ளன.
அதேபோன்று, நியூயார்க் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, கடந்த இருந்து பதிவுசெய்யப்பட்ட ஒருநாள் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

நியூ யார்க்
தேசிய தலைநகர் டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் 325 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் டெல்லியின் புதிய பாதிப்பு விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.