சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில் பத்து நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
சீனாவில் வியாழக்கிழமை லான்சோ மற்றும் கன்சு மாகாணங்களில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் மங்கோலியாவுக்கு பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மங்கோலியா மாகாணத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பெய்ஜிங்
தலைநகர் பெய்ஜிங்கில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அங்கு பிப்ரவரி மாதத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
ரஷ்யா
இதேப்போல் ரஷ்யாவிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு புதன்கிழமை ஒரே நாளில் ஆயிரத்து 29 பேர் உயிரிழந்தனர். இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மாஸ்கோவில் வரும் 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திகொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் 4 மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் குளிர் காலம் தொடங்கவுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் 77 நாள்களுக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அங்கு 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நீச்சல் குளங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் குவிந்து வருகின்றனர். நவம்பர் ஒன்றாம் தேதி முதல், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டர்கள் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் ஸ்கார்ட் மாரிசன் கூறியுள்ளார்.
அர்ஜென்டினா
அர்ஜென்டினாவில் தொற்று பரவல் குறைந்து வருவதால் கட்டாய மாஸ்க் என்ற விதியை அரசு ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அர்ஜென்டினா மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து வந்தனர்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.