ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் மீண்டும் தீயாய் பரவும் கொரோனா தொற்று: புதிய வகை தொற்றால் இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?

சீனாவில் மீண்டும் தீயாய் பரவும் கொரோனா தொற்று: புதிய வகை தொற்றால் இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

நாள்தோறும் 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.... மாகாணங்களில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு.... முடுக்கிவிடப்பட்ட சுகாதாரத்துறை.... இதுதான் தற்போதைய சீனாவின் நிலை.!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று, பூஜ்ய கொரோனா கொள்கையை அறிவித்த சீனா, ஒருவருக்கு தொற்று என்றாலும், அந்த பகுதியையே முடக்கி, தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டியது. வீடு வீடாக சென்று கட்டாய பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என இயங்கினாலும், அதையும் தாண்டி அதிவேக பாய்ச்சலில் பரவும் கொரோனா, சீனாவின் கழுத்தை இறுக்கி பிடித்துள்ளது.

மழை நின்ற பிறகும் தூறல் விட்டபாடில்லை என்பதை போன்று சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால், பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஷாங்காய், குவாங்சோ, செங்டு, ஜினான், லான்ஸோ, ஜிலின் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகரித்திருப்பதால், வணிக வளாகங்கள் ஸ்தம்பித்துள்ளன. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொருளாதார இழப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட தடுப்பூசி விகிதமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கேரளா டூ கத்தார்.. கால்பந்து பார்க்க 5 குழந்தைகளுடன் 2,973 கிமீ காரில் பயணம் செய்த பெண்!

93 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சீன தடுப்பூசிகள் வீரியம் குறைந்தவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிலும், 80 வயதுக்கு மேற்பட்டோரில் பாதி பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துள்ளதாகவும், இவர்களிலும் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், ஒமைக்ரான் BF.7 மற்றும் BA.5.1.7 என்கிற வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. உருமாறிய கொரோனா வகைகள், நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டிருப்பதால், உலக நாடுகள் சீனாவை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகள் மிரண்டுதான் போயிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார சரிவில் இருந்து இந்தியா இப்போதுதான் மெல்ல மெல்ல எழுந்து வர ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில், சீனாவில் பெருந்தொற்று வேகமெடுத்தால் என்ன செய்வதென அண்டை நாடுகள் குழம்பி போயிருக்கின்றன. கொரோனா தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது என்று உலக சுகாதார நிறுவனம் கூறினாலும் சீனாவில் உள்ள நிலவரமோ அதற்கு நேர்மாறாக உள்ளது. 2019ம் ஆண்டுதான் முதல் முறை கொரோனா என்ற வார்த்தையே மக்களுக்கு அறிமுகமானது.

சீனாவில் உள்ள உஹான் நகரத்தில் இருந்து பிற நாடுகளுக்கு பரவிய பெருந்தொற்று உலகம் முழுவதும் தாண்டவமாடியது. சுமார் 64 கோடியே 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 66 லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டது. குட்டித் தீவு தேசம் முதல் பெரும் வல்லரசு நாடுகள் வரை, கொரோனாவின் கொடுங்கரங்களில் சிக்கிய நாடுகளில் லட்சக்கணக்கில் உயிரிழப்பு, கடுமையான பொருளாதார வீழ்ச்சி என உலகமே திணறியது.

இதையும் படிங்க: கரண்ட் கட்.. டார்ச் வெளிச்சத்தில் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர்ஸ்!

இதில் இந்தியா பயப்படுவதற்கு என்ன காரணம் என்றால்... சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படும் ஒமைக்ரான் BF.7 வைரஸ், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதுதான். கொரோனா பெருந்தொற்றால், இந்தியா பல்வேறு சிரமங்களை சந்தித்துவிட்டது. 4 கோடியே 46 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போதும் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ஆயிரத்தை கடந்து தொற்று பதிவாகி வருகிறது. இதனால், சீனாவில் உச்சம் அடைந்திருக்கும் கொரோனா பாதிப்பு இந்தியாவை மீண்டும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

First published:

Tags: China, Corona, Covid-19, Lockdown