கொரோனா தடுப்பூசிக்காக உலகளவில் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட வாய்ப்பு - அதிர்ச்சி தகவல்

மாதிரிப் படம்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

 • Share this:
  இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய ரேஸ் நடந்து வருகிறது என்றே கூறலாம்.  கோவிட் -19 தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மருந்து நிறுவனங்கள் போட்டியிடும் அதே சமயத்தில், இந்த செயல்பாட்டிற்காக அதிகளவில் சுறாக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து பாதுகாவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் பல ஸ்குவாலீனை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

  ‘ஸ்குவாலீன்’ என்பது சுறாவின் கல்லீரல் எண்ணெயிலிருந்து பெறப்பட்ட ஒரு இயற்கை கரிம கலவை ஆகும். இந்த கலவை தடுப்பூசிகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, ஒரு 'துணை' ஆக செயல்படுகிறது. மேலும், இந்த தடுப்பூசிகள், போட்டுக்கொள்ளும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, மருந்தின் அளவையும் பலப்படுத்துகிறது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஒழுங்குமுறை விவகார வல்லுநர்கள் சங்கம் (RAPS) வெளியிட்ட தரவுகளின் படி, மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட 176 தடுப்பூசிகளில் 17 தடுப்பூசிகள் துணை மருந்தினை (adjuvants) பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தத் தரவுகள் அமெரிக்க லாப நோக்கற்ற அமைப்பான சுறா கூட்டாளிகளின் ஆராய்ச்சியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த துணை மருந்துகளில் (adjuvants) குறைந்தது ஐந்து தடுப்பூசி மருந்துகள் சுறா ஸ்குவாலீன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உதாரணமாக, துணை மருந்துகளில் ஒன்றான MF59, பொதுவாக 9.75 மிகி ஸ்குவாலீன் அளவை கொண்டுள்ளது. எனவே கணக்கெடுப்பின் படி, பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு டோஸ் கிடைத்தால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுறாக்கள் கொல்லப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அளவுகளை இரட்டிப்பாக்கினால், அது அரை மில்லியன் சுறாக்களை கொல்ல வழிவகுக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  மற்றொருபுறம் உலகளவில் மக்களை தாக்கி வரும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, ஒப்பனை தொழிலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஸ்குவாலீனுக்காக சுறாக்கள் உலகளவில் வேட்டையாடப்படுகின்றன. இந்த சூழலில் ஒரு தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக ஏற்கனவே குறைந்து வரும் உயிரினங்களை நம்பியிருப்பது நீர்வாழ் விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  ஒரு துணை அறிக்கையின்படி, அழகு சாதனப் பயன்பாட்டிற்காக ஸ்குவாலீன் தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே 2.7 மில்லியன் சுறாக்களை வேட்டையாடியுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை 2024 மற்றும் 2027 ஆண்டுகளுக்குள் இரு மடங்கு அல்லது மும்மடங்காகவும் அதிகரிக்கும் என ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானி சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மில்லியன் கணக்கில் சுறாக்கள் அவற்றின் துடுப்புக்காக வேட்டையாடப்படுகின்றன.

  இதுபோன்ற காரணங்களுக்காக அதிகப்படியான மீன்பிடித்தல், சுறாக்களின் பிழைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. இருப்பினும், சுறாக்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல்வேறு நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் கோதுமை, அரிசி-தவிடு எண்ணெய் போன்ற தாவர அடிப்படையிலான ஸ்குவாலீன் மூலப்பொருளை எடுக்க ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.


  அதன்படி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அமெரிக்க பயோடெக் நிறுவனத்தின் சாத்தியமான COVID-19 தடுப்பூசியை தயாரிக்க தொடங்கியுள்ளது என்று கோடஜெனிக்ஸ் இன்க் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மனித பரிசோதனையை 2020ம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Karthick S
  First published: