இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

ஜோ பைடன்

அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்துள்ளது. தொற்று பாதிப்பு தொடங்கிய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது கொரோனா உறுதியாகும் சதவீதம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் முக கவசம் அணிவதில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

  இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்ட ஜோ பைடன், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இனி மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தெரிவித்தார். அதே சமயம் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் அல்லது இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

  வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் முக கவசம் எதுவுமின்றி பங்கேற்ற ஜோ பைடன், நாடு இத்தகைய மைல்கல்லை எட்டுவதற்கு அமெரிக்க மக்களின் ஒத்துழைப்பே காரணம் என்று புகழ்ந்துள்ளதோடு, இன்று அமெரிக்காவின் சிறந்த நாள் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

  குறைந்த பட்சம் தடுப்பூசி செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பொதுவெளியில் தனிமனித இடைவெளி இன்றி, மாஸ்க் அணியாமல் செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டமான உள் அரங்குகளிலும், பேருந்து, விமான பயணங்களிலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், வீடற்றோருக்கான காப்பகங்கள் ஆகிய இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  அமெரிக்க அரசின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் யார்? செலுத்திக் கொள்ளாதவர் யார் என்று எவ்வாறு அறிவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: