போதிய மருத்துவமனைகள் இல்லை: தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ஏமனில் என்ன நடக்கிறது?

கொரோனாவால் வெறும் 130 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாய் உள்ளது.

போதிய மருத்துவமனைகள் இல்லை: தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ஏமனில் என்ன நடக்கிறது?
கோப்புப்படம்
  • Share this:
ஏமனில் வெறும் 130 பேர் மட்டுமே கொரேனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் அதைவிட நான்கு மடங்கு அதிகமாக உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் கொரோனாவால் மரணமடையக் கூடும் என எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்… என்ன நடக்கிறது ஏமன் நாட்டில்….

அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் சிறிய நாடான ஏமனில் 5 வருடங்களாகத் தொடரும் உள்நாட்டு சண்டையில் இதுவரை ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். போரைக் கடந்து பட்டினியாலும் மக்கள் மரணத்தோடு போராடும் நிலையில் கொரோனா அடுத்த பேரிடியாய் இறங்கியுள்ளது. ஏமனின் வடக்கு பகுதி ஹோத்தி கிளர்ச்சியாளர்களிடமும், தெற்கு பகுதி அமெரிக்கா – சவுதி அரேபியா ஆசி பெற்ற ஆட்சியாளர்களின் கையிலும் உள்ளன. இரு பகுதியிலுமே மருத்துவத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. கொரோனாவால் வெறும் 130 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாய் உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை கூட செய்ய முடியவில்லை.

3 கோடி பேர் வசிக்கும் ஏமன் நாட்டில் வெறும் 500 செயற்கை சுவாசக் கருவிகளே உள்ளன. 333 மாவட்டங்களில் 60 மாவட்டங்களில் ஒரு மருத்துவர் கூட கிடையாது. கொரோனா அறிகுறி இருக்கிறது என ஐ.நாவின் உதவி எண்ணை தொடர்பு கொண்டால் கூட யாரும் பதில் அளிப்பதில்லை. இந்த சூழலில் தினமும் 10 பேர் இறந்து கொண்டிருந்த ஏதன் நகரில் தற்போது 50-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் உயிரிழக்கின்றனர். கடந்த ஒருவாரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் மயானத்தில் அடுத்தடுத்து சவக்குழிகள் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது ஒன்றரை கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ள நிலையில், 40 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டு சண்டையால் சிகிச்சை கிடைக்காத மக்கள் கைவிடப்பட்ட நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கொரோனாவுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Also see:
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading