ராணுவ துப்பாக்கிச்சூட்டில் 2 பலி: கொந்தளித்த மியான்மர் மக்கள் - கலவர பூமியான முக்கிய நகரங்கள்

ராணுவ துப்பாக்கிச்சூட்டில் 2 பலி: கொந்தளித்த மியான்மர் மக்கள் - கலவர பூமியான முக்கிய நகரங்கள்

மியான்மர் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதால், பல முக்கிய நகரங்கள் கலவர பூமிபோல காட்சியளிக்கின்றன.

  • Share this:
    மியான்மர் நாட்டில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆங் சாங் சூகி ஆதரவாளர்களும், பொதுமக்களும் வீதிகளில் திரண்டு, நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் தலைநகர் நேப்பிடேவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தலையில் குண்டு பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அவரது உருவப் படத்தை கையில் ஏந்தியபடி, பேரணியாக சென்றும், பொது இடங்களில் அஞ்சலி செலுத்தியும் ராணுவ ஆட்சிக்கு தங்களது எதிர்ப்பை பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

    மாண்டலே நகரில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, ராணுவ வீரர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கையில் கிடைத்த பொருட்களை வீசி எறிந்து, ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிய ராணுவத்தினர், துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், மேலும் இருவர் உயிரிழந்தனர்.

    எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால் மியான்மரின் பல நகரங்கள் கலவர பூமியாக மாறியுள்ளன. ஆங்காங்கே பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள், மாண்டலே நகரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கைகளை தட்டி ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனிலும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டு, ராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    மற்றொருபுறம் யாங்கோனில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் பலியான இருவரின் சடலங்களும் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: