பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற உள்ளது. பிரிட்டன் நேரப்படி இன்று மாலை 6 மணி அளவில் இந்த நம்பிக்கை இல்லை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
2019ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வானார். இவர் சமீபத்தில் கோவிட் லாக்டவுன் விதிமுறைகளை மீறி பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். இது பெரும் சர்ச்சை ஆனது. பிரதமரே இவ்வாறு கோவிட் விதிகளை பின்பற்றாமல் இருந்த விவகாரம் சொந்த கட்சி உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கிரஹாம் பிராடிக்கு 15 சதவீதத்துக்கும் உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதை அடுத்து இன்று மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்த உடனே வாக்குகள் எண்ணப்படும்.
ஒருவேளை கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் வாக்கெடுப்பில் அவர் தோல்வியை தழுவுவார். பின்னர் கட்சி சார்பில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.
இந்த விவகாரத்தை கடந்து போக வேண்டும் என போரிஸ் ஜான்சன் எவ்வளவோ வலியுறுத்தியும் இதை விட்டு வைப்பதாக இல்லை என கன்சர்வேடிவ் கட்சியின் ஒரு பிரிவினர் போரிஸ்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் முன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட போரிஸ் ஜான்சன், இந்த தவறு மீண்டும் நடக்காது என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க:
ரூ.38.80 லட்சம் பரிசுத்தொகை - அமெரிக்க உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மாணவி
இருப்பினும், எதிர்க்கட்சி மட்டுமல்லாது சொந்த கட்சியினரே போரிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இதில் வெற்றி பெற்று என் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன் என போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.