Colorado Supermarket mass shooting | அமெரிக்காவின் கொலராடோவில் ரத்தக்களறி: சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி- அமெரிக்காவை அச்சுறுத்தும் படுகொலைகள்

கொலராடோ துப்பாக்கிச்சூடு.

வருவோர் போவோருக்கெல்லாம் துப்பாக்கிகள், கொரோனா கால பொருளாதார நெருக்கடி, தலைவிரித்தாடும் போதைப்பழக்கம், நிறவெறி ஆகியவைகளே இத்தகைய படுகொலைகளுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
    அமெரிக்காவின் மற்றுமொரு ரத்தக்களறி துப்பாக்கிச் சூடு படுகொலை சம்பவத்தில் கொலராடோவில் சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானார்கள். இதனால் அங்கு மக்களிடையே கடும் பீதி பரவியுள்ளது.

    அமெரிக்காவின் இன்னொரு ரத்தவெறி கொலை சம்பவத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் மேற்கு அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சரமாரித் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் அந்த இடமே போர்க்களமாகி 10 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

    பலியானவர்களில் எரிக் டாலி என்ற போலீஸ் அதிகாரியும் அடங்குவார். டென்வர் அருகே பூல்டரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இந்த அதிர்ச்சிச் சம்பவத்துக்கு முதலில் வினையாற்றியவர் இந்த போலீஸ் அதிகாரி எரிக் டாலிதான்.

    இது தொடர்பாக வெளியான வீடியோவில் வெள்ளை நடுத்தர வயது மனிதர் ஒருவர் சட்டையில்லாமல் உடல் முழுதும் ரத்தாபிஷேகம் செய்தது போல் இருந்த காட்சி பலரையும் பீதிக்குள் ஆழ்த்தியுள்ளது. இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக பூல்டர் பகுதி போலீஸ் உயரதிகாரி யாமகுச்சி தெரிவித்தார். எத்தனை பேர் பலியானார்கள் என்ற முழுவிவரத்தை அவர் இன்னும் அளிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது, இதன் காரணம் என்னவென்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



    பூல்டரில் இந்த சூப்பர் மார்க்கெட் ஸ்டோரை விட்டு துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக அதிர்ஷ்டவசமாக வெளியே வந்த டீன் ஸ்கில்லர் என்ற நபர் அசோசியேட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்துக்குக் கூறுகையில், துப்பாக்கிசூடு சப்தம் கேட்டது, உடனடியாக 3 பேர் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தார். ஒருவர் வாகன நிறுத்துமிடத்திலும் மற்றவர் மளிகைக் கடை வாசலிலும் கீழே கிடந்ததாக தெரிவித்தார்.

    கொலராடோ கவர்னர் ஜாரெட் போலிஸ் கூறும்போது, “சொல்ல முடியாத இந்தத் துயரத்தைப் பார்த்து என் இருதயம் நொறுங்கியது. அர்த்தமற்ற துன்பம், மதியம் நிகழ்ந்ந்த இந்த துயரச்சம்பவத்திற்கு வார்த்தைகள் நீதியளிக்க முடியாது. எங்கள் சமூகம் விரைவில் இதிலிருந்து மீள பிரார்த்திக்கிறேன்” என்றார்.

    போலீஸ் வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் என்று அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்படுகிறது. கடந்த வாரம் தென் கிழக்கு மாநிலமான ஜார்ஜியாவில் ஆசியர்கள் வைத்திருக்கும் ஸ்பாக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 8 பேர் பலியானார்கள்.

    கொலராடோவில் இதற்கு முன்பாகவும் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1999-ல் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கொலம்பைன் உயர்நிலைப்பள்ளியில் தன் வகுப்புத் தோழர்களை 12 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு அனைவரது ரத்தத்தையும் உறையச் செய்தது நினைவிருக்கலாம்.

    வருவோர் போவோருக்கெல்லாம் துப்பாக்கிகள், கொரோனா கால பொருளாதார நெருக்கடி, தலைவிரித்தாடும் போதைப்பழக்கம், நிறவெறி ஆகியவைகளே இத்தகைய படுகொலைகளுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: