அசர்பைஜான், அர்மீனியா நாடுகளுக்கிடையே தீராத மோதல் - போர் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா வலியுறுத்தல்

அசர்பைஜான், அர்மீனியா நாடுகளுக்கிடையே தீராத மோதல் - போர் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா வலியுறுத்தல்

அசர்பைஜான், அர்மீனியா இடையே தீராத மோதல்.

அசர்பைஜான், அர்மீனியா இடையே மோதல் இருந்துவரும் நிலையில், போர் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

  • Share this:
அசர்பைஜான்(Azerbaijan) மற்றும் அர்மீனியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளிலும் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. போர் பதற்றத்தை தணிப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக அதிபர் டிரம்ப் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளனர்.

அசர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய இருநாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாக கடந்த காலங்களில் இருந்து வந்தன. 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பிறகு, அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டன. இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே 1994ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் விளைவாக, நகோர்னோ-கராபக்-கின் பெரும்பான்மையான பகுதிகள் அர்மீனியா படைகள் வசம் சென்றன. சர்வதேச நாடுகளால் அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அங்கு, ராணுவத்தை நிலை நிறுத்தியதுடன், தன்னாட்சி அதிகாரத்தையும் அர்மீனியா வழங்கியது. அதன்பின்னர் சிறுசிறு மோதல்கள் இருந்துவந்த நிலையில், 2016ம் ஆண்டு பெரும் தாக்குதல் நடைபெற்றதில் பலர் கொல்லப்பட்டனர்.

Also read: புழல் சிறைக் காவலர் அரிவாளால் வெட்டிக்கொலைஇந்த நிலையில் நகோர்னோ-கராபக் பிராந்தியத்தின் தலைநகரான ஸ்டெபனாகர்ட் பகுதியில், 27ம் தேதி அசர்பைஜான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் 16 பேர் வீரமரணம் அடைந்திருப்பதாக அர்மீனியா கூறியுள்ளது. மேலும் அசர்பைஜான் ராணுவத்தின் 2 ஹெலிகாப்டர்கள், 3 உளவு விமானங்களை சுட்டுவீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், அசர்பைஜான் தரப்பில், தாக்குதலை முதலில் தொடங்கியது அர்மீனியா தான் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோதலால் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு கிராமங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாகவும் அசர்பைஜான் ராணுவம் அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து இருநாடுகளிலும் உடனடியாக ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அர்மீனியாவுக்கு துருக்கி பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல இருநாடுகள் இடையே போர் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளதாக ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியுள்ளார். இந்த மோதலில் ரஷ்யாவும் - துருக்கியும் மோதிக் கொண்டால், அசர்பைஜானில் இருந்து துருக்கிக்கு எடுத்துச் செல்லப்படும் 10 லட்சம் பாரல் கச்சா எண்ணெய் பைப்லைன் பாதிக்கப்படும்.

இருநாடுகள் இடையிலான மோதலை நிறுத்துவதற்கு அமெரிக்க தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை போர் பதற்றத்தை தணிக்க வலியுறுத்தியுள்ளன.
Published by:Rizwan
First published: