உக்ரைன் மீதான போரில் இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய கட்டடங்கள் தீக்கிரையாகின.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன.
கிழக்கு உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் பள்ளி மற்றும் சமுதாய கூடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கார்கிவ் நகரில் உள்ள கிழக்கு ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோவோவில் குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்த மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த போது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை: ரூ.7,500 கோடி கடன் வழங்கும் இந்தியா!
இதே போல் தலைநகர் கீவில் உள்ள ஸ்வியா டோஷின்ஸ்கி பகுதியில் குண்டுகள் வீசப்பட்டதில் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலான இந்த கிடங்கு தீயினால் முற்றிலும் சேதமடைந்தது.
உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லீவிவ் நகரத்தில் மூன்று முறை பெரிய அளவிலான குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு குறித்த தகவல்கள் இல்லை.
மரியுபோலில் தாக்குதலுக்கு உள்ளான திரையரங்கத்திலிருந்து 130 பேர் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் போது தஞ்சம் புகுந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் வெளியாகவில்லை. மூன்றரை லட்சம் பேர் வசிக்கும் மரியுபோலில் அன்றாடம் 50 முதல் 100 குண்டுகள் வரை வீசப்படுவதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கீவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் பிரபல நடிகை ஒக்சானா ஷ்வெட்ஸ் உயிரிழந்தார். 67 வயதான இவர், தனது சிறந்த நடிப்புக்காக உக்ரைனில் உயரிய கலை விருதை வென்றுள்ளார். ரஷ்யா தாக்குதல் நடத்திய போது, வீட்டில் இருந்த ஒக்சானா உயிரிழந்ததாக, குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 780 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவ நிலையங்களின் மீது 43 முறை நடத்தப்பட்ட தாக்குலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஐ.நா. உக்ரைனிலிருந்து 31 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.