அமெரிக்காவின் உளவுத்துறையான CIA) உலகின் முதன்மையான உளவுத்துறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்த அமைப்பு தற்போது முதன் முதலாக CTO அதாவது தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற தலைமை பொறுப்பை உருவாக்கி, அதற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்த் முல்சந்தானி என்பவரை நியமித்துள்ளது.
இது தொடர்பாக சிஐஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சிஐஏ இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ் நந்த் முல்சந்தானியை அமைப்பின் முதல் CTO ஆக நியமித்துள்ளார். முல்சந்தானிக்கு தனியார் துறை, புதிய நிறுவனங்கள், அரசு என பரந்துபட்ட துறைகளில் அனுபவம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிலிக்கான் வேலி மற்றும் அரசின் பாதுகாப்பு துறைகளில் இவர் பணியாற்றி அனுபவம் கண்டுள்ளார்' என்றுள்ளது.
நந்த் முல்சந்தானியின் இந்த நியமனம் அமெரிக்க உளவுத்துறை செயல்பாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது . தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சைபர் பாதுகாப்பு என்பதை பிரதானமான அம்சமாக அனைத்து அரசுகளும் கருதுகின்றன. இதையடுத்து, உலகின் முன்னணி உளவுத்துறையான சிஐஏ, தனது தொழில்நுட்ப சவால்கள் எதிர்கொள்ளவும், சீனா உள்ளிட்ட நாடுகளின் போட்டிகளை எதிர்கொள்ளவும் CTO என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.
எனவே, முல்சந்தானி சிஐஏவின் எதிர்கால தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப புதிய செயல்திட்டங்களை உருவாக்குவார் என சிஐஏ தனது அறிவிப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் முல்சந்தானி, அமெரிக்க பாதுகாப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றியுள்ளார். அத்துடன் ஆப்ளிக்ஸ், டிடர்மினா போன்ற பெருநிறுவனங்களிலும் சிஇஓவாக இருந்துள்ளார்.
அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஹார்வட்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தனது நியமனம் குறித்து முல்சந்தானி கூறுகையில், 'சிஐஏ எனக்கு அளித்த இந்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். மிகச் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களை உள்ளடக்கிய குழுவில் இணைந்து பணியாற்றி, அமைப்பை மேலும் பலப்படுத்த முயற்சி செய்வேன்' என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.