800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது... இதனை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் நீண்ட இரவைக் கொண்ட டிசம்பர் 21 ஆம் தேதியை ஒளியூட்ட வானில் இரண்டு கிரகங்கள் இணையவிருக்கின்றன. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு வானில் தெரியவிருக்கிறது. சூரிய மண்டலத்தின் இரண்டு மாபெரும் கிரகங்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை வரும் 21 ஆம் தேதியன்று அருகருகே வரவிருக்கின்றன. அப்போது இரண்டு கிரகங்களும் இணைந்து அடிவானில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல ஒளிரும். வானிலை தெளிவாக இருக்கும் பட்சத்தில் இதனை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் காணலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சனிக்கோளும், வியாழனும் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே வருகின்றன. பூமியில் இருந்து பார்க்கும்போது இவை அருகருகே இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் லட்சக்கணக்கான கிலோமீட்டகள் இடைவெளியிலேயே இருக்கின்றன. கடைசியாக 1226 ஆம் ஆண்டு இந்த கிரகங்களின் இணைவை பூமியிலிருந்து பார்க்க முடிந்தது. அடுத்த 400 ஆண்டுகள் கழித்து 1623 ஆம் ஆண்டில் இவை நெருங்கி வந்த காட்சி பூமியில் தென்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் 800 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிகழ்வு மீண்டும் பூமியில் தெரியவிருக்கிறது.
இரு கிரகங்கள் இணைந்து நட்சத்திரம் போல ஒளிரும் நிகழ்வு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று ஞானியர் சிலர் குழந்தை இயேசுவை பார்த்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய நட்சத்திரம் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து தோன்றியதாகவும், வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அப்போது நெருங்கிவரவில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ வரும் 21 ஆம் தேதி வியாழனும், சனி கிரகமும் நெருங்கி வருவது உறுதி என்பதால் அதனை கண்டுகளிக்க வானியல் ஆர்வலர்கள் தயாராகி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chirstmas