சீனாவில் லூனார் புத்தாண்டு எனப்படும் வசந்த கால விழா கொண்டாட்டம். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வசந்தகால விழா எனப்படும் இந்த விடுமுறை காலமானது சீனாவின் மிக முக்கியமான தேசியத் திருவிழா ஆகும், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவானது, பெரிதாக கொண்டாடப்படவில்லை. தற்போது தொற்று பரவல் சீனாவில் குறைந்துள்ளதால், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடி வசந்தகால விழாவை கொண்டாடினர். தலைநகர் பீஜிங்கில் கலை நிகழ்ச்சிகள் அடங்கிய, விழா மாரத்தான் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்த மேடை, கண்களை கவரும் விதமான வண்ண விளக்குகள், 3டி விளக்குகளால் ஆன பல்வேறு ஒளி வடிவங்கள் மற்றும் தத்ரூபமான தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விழாவில், யானைகளை போன்ற வேடமணிந்த கலைஞர்கள் நடனமாடியதுடன், சீனாவின் பாரம்பரியமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன், களைகட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்கள் : பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷை தீண்டிய நல்ல பாம்பு... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி (வீடியோ)
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நகரின் பல பகுதிகளும், இரவிலும் பகல் போல காட்சியளித்தன. சீனாவின் பாரம்பரியப்படி ஒவ்வொரு ஆண்டை குறிக்கும் விலங்குகளும் வண்ண விளக்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தன. 3டி விளக்குகளால் தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு வடிவங்கள் வானில் வர்ண ஜாலம் நிகழ்த்தின.
பல்வேறு இடங்களில் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி, கைகளால் ஓவியங்களை தீட்டியும், உணவுகளை பகிர்ந்து உண்டும் சீனர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
நீருக்கு நடுவே அமைந்தது போன்ற தத்ரூபமான மேடையில், பாரம்பரிய உடையணிந்து மெல்லிய இசைக்கு மத்தியில், பெண்கள் பாடி நுணுக்கமான நடன அசைவுகளை வெளிப்படுத்திய நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
இதையும் படியுங்கள் : புதிய கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்..
குளிர்கால ஒலிம்பிக்கை விளக்கும் வகையில், வெண்பனியால் போர்த்தப்பட்டு இருந்தது போல அலங்கரிக்கப்பட்ட மேடையில், கலைஞர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டவாறு வந்து, சீனாவின் பாரம்பரிய ஒபேரா இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வசந்த கால விழாவை, சீன மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கலை நிகழ்ச்சிகள் 170 நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.