ஹவாய் தீவின் மளென்கே பகுதியில் இருக்கும் ஓர் உயர்ந்த மலைச்சிகரத்தில் இருக்கும் தொலைநோக்கியின் கேமராவில் பதிவாகியிருந்த ஒரு காட்சியைப் பார்த்ததும் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருண்ட வானில் மேலிருந்து பச்சை நிறத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் பல கோடுகள் பூமியை நோக்கி இறங்குவது அந்தக் காட்சியில் பதிவாகியிருந்தது. ஒரு சில நொடிகளுக்கு நீடித்த இந்த நிகழ்வு தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வானில் இருந்து பூமியில் பாய்ந்த பச்சை நிற கோடுகளை முதலில் கண்டுபிடித்தது ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான National Astronomical Observatory of Japan ஆகும். ஜப்பான் ஆராய்ச்சி மையத்தின் டெலஸ்கோப் மூலம் இந்த பச்சை நிற கோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில், இருக்கும் உண்மையை ஆராய்ந்தபோது மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள், முதலில் இதை, NASA-வின் ICESAT-2/43613 செயற்கைக்கோளின் லேசர் வெளிச்சம் என்று கருதினார்கள். இந்த செயற்கைக்கோளானது பூமியின் சமநிலை, தரை மட்டத்தை அளவிட்டு ஆராய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. அந்த செயற்கை கோளில் இருந்து இதுபோன்ற லேசர் ஒளியைப் பயன்படுத்துவது வழக்கம். அதனால் அந்த செயற்கைகோளில் இருந்து இந்த பச்சை நிற ஒளிக்கற்றைகள் தோன்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால், ஹவாய் பகுதியில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைகோள் அந்த பகுதியின் மேல் பறக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படியானால், இந்த ஒளி எங்கிருந்து வந்தது? யார் இதைப் பூமி நோக்கிப் பாய்ச்சியது என்று தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இறுதியில், இந்த மர்மமான ஒளிக்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவிற்கு சொந்தமான செயற்கைக்கோளில் இருந்து பாய்ந்த லேசர் ஒளிக்கற்றையாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பூமியின் தரை மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கணக்கிடும் சீன சாட்டிலைட்டின் லேசர் வெளிச்சங்களாக இவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் குறித்து சீனா இதுவரை வாய்திறக்கவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவுக்கு சொந்தமான உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்கா சீனா மீது தனது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால், மர்மமான இந்த பச்சை ஒளிக்கற்றைகள் வேறு ஒரு சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இந்த பச்சை கோடுகள் பாயும் புகைப்படத்தை இணையத்தில பதிவிட்டு வேற்றுகிரகவாசிகள் பூமியை ஸ்கேன் செய்வதாக சிலர் செய்தி பரப்பி வருகிறார்கள்.
வான்பரப்பில் ஏதேனும் விசித்திரமான நிகழ்வு அரங்கேறினால் அது ஏலியன்களின் செயல்தான் என நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கேற்றார் போல், இது வரை விடை கிடைக்காத எத்தனையோ விசித்திர சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அதனால் இதுவும் ஏலியன்களின் செயலோ என்கிற அச்சமும் நிலவி வருகிறது.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, China, United States of America