கிழக்கு ஆசியாவில் இருக்கும் தன்னாட்சி பெற்ற நாடு தைவான். இது வடமேற்கு பசிபிக் பிராந்தியத்தில் கிழக்கு மற்றும் தென்சீனக்கடல் இணையும் இடத்தில் அமைந்திருக்கும் முக்கியமான பகுதி. ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது தைவான். ஒரு காலத்தில் சீனாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்த தைவான் கடந்த 1949-ல் சீனாவின் அதிகாரத்தில் இருந்து விலகி தன்னை சுயாட்சி நாடாக அறிவித்துக்கொண்டது.
1960 களில் தொழில்வளத்தில் தைவான் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது. குறிப்பாக எல்கட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் தைவான் முதலிடம் பிடிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கியது தலைவலி. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகளாக தைவான் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்று தொடர்ந்து கூறிவருகிறது சீனா. அதோடு தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குத் தான் என்று கூறி அமெரிக்காவையும் வெறுப்பேற்றி வருகிறது. அதோடு தைவானை சீண்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது சீனா.
அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது மீண்டும் தைவானை அச்சுறுத்தியுள்ளது சீனா. கடந்த சில ஆண்டுகளாகவே தைவான் கடல் பரப்பில் சீன போர் கப்பல்களை அனுப்புவதும், அந்நாட்டு வான் பரப்பில் போர் விமானங்களை பறக்க விடுவதுமாக தொடர்ந்து சீனா அத்துமீறி வருகிறது. அது போலவே புதன் கிழமையும் தனது அச்சுறுத்தலை சீனா தொடங்கியுள்ளதாக தைவான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. புதன்கிழமை காலை ஆறு மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை சீனாவில் 30 போர் விமானங்கள் தைவானின் வான் பரப்பில் பறந்து அச்சமூட்டியதாக தைவான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானங்கள் தைவான் தென்மேற்கு பகுதியில் இருந்து தென்கிழக்குப் பகுதி நோக்கி தொடர்ச்சியாக பறந்ததாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
பறந்த விமானங்கள் குறித்தும் தைவான் ராணுவ அமைச்சகம் விபரங்களை தெரிவித்துள்ளது. 21 ஜே-6 போர் விமானங்களும், H-6 வகையைச் சேர்ந்த குண்டு வீசும் விமானங்கள் நான்கும், இரண்டு வழிகாட்டி விமானங்களும் தங்கள் வான் பரப்பில் பறந்து அச்சமூட்டியதாக தைவான் அரசு கூறியுள்ளது. தைவான் நாட்டிற்கு அமெரிக்க நடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா தென் சீனக்கடல் பகுதியில் பெரிய அளவிலான போர் ஒத்திகையை நடத்தியது. அப்போதிருந்தே தங்கள் கடற்படை மூலம் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் தைவான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவானை தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்று தொடர்ந்து கூறி வரும் சீனா, தைவானின் சுயாட்சி முறையை அங்கீகரிக்கும் விதமாக மற்ற நாடுகள் தைவானுக்கு ஆதரவளிக்க முன் வரும்போதெல்லாம் சீனா இது போன்ற ராணுவ அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.