தலிபான்களுடனான நட்பு உறவுக்கு தயாராக உள்ளோம் - சீனா

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியாக உறவுக்கு தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியாக உறவுக்கு தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

 • Share this:
  அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வந்தன. தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வந்தனர். தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி சென்றுவிட்டது.

  மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய தலிபான் படையினர் தலைநகர் காபூலை நேற்றைய தினம் சுற்றி வளைத்தனர். ராணுவ தாக்குதல் மூலம் காபூலுக்குள் நுழைய விரும்பவில்லை என்று தெரிவித்த தலிபான் அமைப்பினர், நகருக்கு வெளியிலேயே காத்திருந்தனர்.

  இந்நிலையில் அதிபர் அஷ்ரப் கனியுடன் தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள் அதிபர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து விலகிய அஷ்ரப் கனி, ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்றார். அவர் தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், காபூல் நகருக்குள் தாலிபான் படை நுழைந்தது.

  Also read: தாலிபான்கள் மீது அச்சம்: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்த மக்கள்

  அத்துடன், ஆப்கன் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, உலக நாடுகள் பலவும் காபூலில் இருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு பிரதிநிதிகளை நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  இதனிடையே, அதிபர் அஷ்ரப் கனி தனது முகநூல் பதிவில், இப்போதிருந்து ஆப்கானிஸ்தானுக்கும், மக்களுக்கும் தலிபான்கள்தான் பொறுப்பு. மக்களின் மரியாதை, சொத்து, பாதுகாப்பு அனைத்துக்கும் தலிபான்கள் பொறுப்பேற்கவேண்டும். ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது. ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள்.அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது.

  நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னபின்னாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 லட்சம் மக்கள் வாழும் நகரம் ரத்தக்களறியாகும். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே, தலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடு வாழ முடியாது. அவர்களில் அடக்குமுறைகளின் வாழ இயலாது என்பதால் ஆப்கானை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கு தஞ்சமடைய ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர்.

  இந்நிலையில், தலிபான்களுடனான நட்பு உறவுக்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ஹூவா சுனிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியை சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது.

  மேலும், ஆப்கானிஸ்தானுடன் நட்பு ரீதியிலான உறவை தொடர்ந்து வளர்க்க சீனா தயாராக உள்ளது. அதேபோல், தலிபான்களும் சீனாவுடன் நல்ல உறவை வளர்க்கும் தங்கள் நம்பிக்கையை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  ஏற்கனவே தலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஆதரித்த நிலையில், தற்போது சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
  Published by:Esakki Raja
  First published: