தன்னாட்சி பெற்ற நாடாக திபெத் இருந்தாலும், அது சீனாவின் கடடுப்பாட்டிற்குள் இருப்பது போன்ற மாயையை சீனா ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை விரும்பாத திபெத்தியர்கள், திபெத்தில் சீனாவின் எந்த நடவடிக்கையையும் ஆதரிப்பதில்லை. ஆனால் இப்போது சீனா திபெத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் நான்காயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்பாதைகள், 2035ஆம் ஆண்டிற்குள் 59 புதிய விமானநிலையங்கள், 300 ஹெலிபேட்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் பணியிலும் சீனா இறங்கியுள்ளது. திபெத்திற்கான வளர்ச்சிக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அந்த நாட்டை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டம் இது என பலரும் சீனாவின் நடவடிக்கையை விமர்சித்து வருகிறார்கள்.
சீனாவின் ஊடுருவலை விரும்பாமல் திபெத்திற்குள்ளும் திபெத்திற்கு வெளியேயும் கருத்து வேறுபாடுகளை கருத்தியல் ரீதியாக நசுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. வளர்ச்சி என்பது திபெத்திற்கு எட்டாக் கனி தான். அங்கு தற்போது மூன்றே மூன்று மார்க்கங்களில் மட்டும்தான் ரயில் பாதை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழித்தடங்களுடன் கூடிய ஐந்தாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் திட்டமும் சீனாவிடம் இருக்கிறதாம். இது போன்ற உட்கமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தனது படைகளை மிக சுலபமாக திபெத்திற்குள் சீனாவால் இறக்க முடியும்.
ஜிங்ஜியாங், கிங்ஹாய், சிசுவான் மற்றும் யுனான் உள்ளிட்ட மாகாணங்களை திபெத்தின் லாசா, நயிங்த்ரிசிகாட்சே உள்ளிட்ட நகரங்களோடு இணைக்கும் வகையில் ரயில்பாதை திட்டங்களை செயல்படுத்த சீனா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜிங்ஜியாங்-திபெத் ரயில் பாதை திட்டம் என இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டியுள்ளது சீனா.
1990 ஆம் ஆண்டு முதலே திபெத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது சீனா. நீர் மின் திட்டங்கள், நகரமயமாக்கல், சுரங்கப் பணிகள், சுற்றுலா மற்றும் ராணுவ கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் சீனா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், திபெத்தின் லாசா நகரில் வாழும் குடிபெயர்ந்த சீனர்கள் திபெத்தியர்களை திருமணம் முடிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன. அதையும் சீனா மறைமுகமாக ஊக்குவிக்கிறது.
இந்த மிகப்பெரிய முதலீடுகள் சீனாவின் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதாவது திபெத் மீதான தனது ஆதிக்க நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவே இது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். மேலும் இது திபெத்தை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டம் இது என பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Infrastructure Projects, Railway