2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய சுனாமியால் பாதிப்பிற்கு உள்ளான புகுஷிமா அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுகத்தத் தொடர்ந்து, அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அத்துடன், பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.
இதனால், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் உலையைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. எனவே, 6 யூனிட்களில் 3 யூனிட்கள்சேதம் அடைந்தன. அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.
இந்நிலையில், புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்து விட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் அணு உலையின் கழிவு நீரை கடலில் கலந்து விடும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் கூறுகையில், “அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றுவது இன்றிமையாத பணி. இது ஓரிரு நாட்களில் முடியக்கூடியது அல்ல. பல ஆண்டுகள் இதற்குத் தேவைப்படும். அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும்” என்றார்.
இந்நிலையில், அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானின் இந்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து ஜப்பான் இந்த பணிகளை மேற்கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால், உள்ளூர் மீனவர்களும், அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணு உலையின் கழிவு நீரை கடலில் கலந்தால் அது கடல் வளத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது என்றும் மேலும், அது மனிதர்களின் மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கிரீன்பீஸ் என்கிற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.
Must read : புதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை
அதேபோல் ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு அண்டை நாடான சீனா மற்றும் தென்கொரியா ஆகியவை கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இந்த முடிவை உடனடியாக ஜப்பான் திரும்பப் பெற வேண்டும் எனவும் இரு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Japan, Nuclear Power plant