சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் விதமாக, தைவானை சுற்றி சீனா ராணுவ படைகள் மாபெரும் போர் ஒத்திகைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக சீனா அரசு தரப்பு தெரிவித்துள்ள தகவலில், இன்று நண்பகல் 12 மணி அளவில் தைவான் தீவை சுற்றியுள்ள ஆறு முக்கிய இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும். கடற்படை, விமானப் படை போர் ஒத்திகைகள் நடைபெறும் இந்த நேரத்தில் வேறு விமானங்களோ, கப்பல்களோ அந்த பகுதிக்குள் நுழைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக தைவானிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டது தான் இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. தைவான் தன்னை சுதந்திர தனி நாடாக கூறி வரும் நிலையில், சீனா தைவானை தனது நாட்டின் அங்கம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிடுவது தீயுடன் விளையாடுவதற்கு சமம் என சீனா எச்சரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் மிரட்டலை கருத்தில் கொள்ளாமல், தைவானுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி இரு நாள்களுக்கு முன்னர் தைவானுக்கு பயணம் மேற்கொண்டார்.
தைவானில் அதிபர் ட்சாய் இங் வென்னை சந்தித்துக் கலந்துரையாடிய நான்சி பெலோசி, தைவானின் ஜனநாயகத்தை அமெரிக்கா ஆதரிக்கும், தைவானுடன் அமெரிக்கா நிற்கும் என்று கூறியுள்ளார். நான்சி பெலோசி மற்றும் அதிபர் ட்சாய் இங் வென் சந்திப்பு நட்பு ரீதியானது, இரு நாடுகளுக்கு இடையில் உறவை மேம்படுத்த உதவும் என்றும், பொருளாதாரம், ஜனநாயகம், பசிபிக் பகுதி உறவு முறை ஆகியவற்றை உறுதி செய்யும் எனத் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி - தொடரும் பரபரப்பு
அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணம் சீனாவை வெகுவாக சீண்டியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாகவே தைவானை சூழ்ந்து மாபெரும் போர் ஒத்திகையை சீனா இன்று அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் போருக்கான ஏற்பாடுகளை தான் சீனா மேற்கொண்டு வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தான் இந்த போர் ஒத்திகை என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Taiwan, USA vs CHINA