ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனா-ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து…36 பேர் பலி

சீனா-ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து…36 பேர் பலி

தீ விபத்து

தீ விபத்து

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indiachina

  மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வென்ஹாங் மாவட்டத்தில் உள்ள ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது.

  ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 36 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேரை காணவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

  இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவு படுத்தப்படவில்லை. ஆனால் முறையான அனுமதியில்லாமல் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருப்பு மைவக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  சீனாவில் இது போன்ற தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அதற்கு சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு விதிமுறைகளில் அலட்சியம் காட்டுவதே காரணம் என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆபத்தை விளைவிக்க கூடிய ரசாயனப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் அரசு நிபந்தனைப்படி பாதுகாப்பு விசயங்கள் கையாளப்படுகின்றனவா என அதிகாரிகள் கண்காணிப்பதில்லை எனவும், அதனால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: எஞ்சின் கோளாறு.. குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்... 8 பேர் பலி!

  இதே போல் வடக்கு சீனாவின் துறைமுக நகரமான டியான்ஜின் நகரில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த தொழிற்சாலை விபத்தில் 175 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரசாயன குடோனில் ஏற்பட்ட  விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் எனக் கூறப்படுகிறது. அந்த குடோனில் அனுமதி பெறாத ஆபத்தான ரசாயன பொருட்கள் மெத்தனமாக கையாளப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

  ஹெனான் மாகாணத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்திற்கும் அதிகாரிகளின் முறைகேடுகளே காரணம் என்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த, முக்கிய வர்த்தக நகரங்களில் இது போன்ற தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்வது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் எனவும் எச்சரிக்கிறார்கள் அந்நாட்டு பொருளாதர வல்லுநர்கள்.

  ஹெனான் மாகாணத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்ற ஆபத்தான ரசாயனப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் அரசு அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு முழு ஆய்வை நடத்தி, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

  செய்தியாளர்: ரொசாரியோ ராய்

  Published by:Murugesh M
  First published:

  Tags: China, Fire accident