கடந்த ஆண்டு லடாக், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில் பலியான சீன ராணுவ வீரர்களை இழிவுபடுத்தியதாக சீன அதிகாரிகள் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
38 வயதான புலனாய்வு பத்திரிகையாளர் கியு ஜிமிங், இவரை சனிக்கிழமையன்று கைது செய்தனர். இவர் சீன அரசு வெளியிட்ட பலி எண்ணிக்கையை கேள்விக்குட்படுத்தினார். வெள்ளிக்கிழமையன்று கல்வான் மோதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானதாக சீனா அதிகாரப் பூர்வமாக தெரிவித்தது. 1967-க்குப் பிறகு மோசமான மோதலாக இது பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் போன்று சீனாவில் செயல்படும் வெய்போவில் கியு ஜிமிங் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்றும் பலியானோரில் சீன ராணுவத்துக்கு உதவ வந்தோரும் அடங்குவர் என்று கூறினார்.
மேலும் இந்தியா 20 ராணுவ வீரர்களை இழந்ததாக உடனே அறிவித்த போது சீனாவுக்கு என் 8 மாதங்கள் ஆனது பலி எண்ணிக்கையை அறிவிக்க என்று கேள்வி எழுப்பினார். இந்தியா தான் வென்றதாகவே கூறிக்கொள்கிறது.
இதனையடுத்து கல்வான் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை இவர் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறியும், தவறான தகவல்களை அளித்ததற்காகவும் கைது செய்யப்பட்டார்.
இவரது கணக்கும் முடக்கப்பட்டது. இவரது கைது அங்கு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது, இவரது போஸ்ட்டுக்கு மட்டும் 730 மில்லியன் பார்வையாளர்கள் குவிந்தனர்.
இதே போல் கைது செய்யப்பட்ட இன்னொரு நபர் வீ சாட்டில் இதே போல் சீன ராணுவ வீரர்களை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 28 வயதாகிறது.
கைதான இன்னொரு நபர் 25 வயது கொண்ட யாங் என்ற புனைப்பெயர் வைத்திருப்பவர். இவரும் சீன வீரர்களை அவமதிப்பதாக நெட்டிசன்கள் புகார் எழுப்ப இவரையும் கைது செய்துள்ளனர்.
சீன அரசு ஊடகங்கள் சீன ராணுவ வீரர்களின் வீர தீரத்தைப் பாராட்டிப் பேசியதோடு, சீன வீரர்களை இழிவு படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் கூறி எச்சரித்திருந்தது.
கல்வான் மோதலில் உயிரிழந்த ராணுவ வீர்ரகள் குடும்பத்தினருக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று சீன அரசு சகாயம் செய்துள்ளது.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை மீது கேள்வி எழுப்பிய, ஏன் இத்தனை கால தாமதமானது போன்ற கேள்விகளை எழுப்பிய வலைப்பதிவினர் கைது செய்யப்பட்டது அங்கு கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.