உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. கிரேன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹெனான் மைன் நிறுவனம், சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள 380 அலுவலகங்களில் 2,700 பணியாளர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் தயாரிப்புகள் ஆஸ்திரேலியா, வியட்நாம், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மால்டா, துர்க்மெனிஸ்தான், சவுதி அரேபியா, பெரு மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் விற்கப்படுகின்றன.
2022ஆம் ஆண்டு சீன பொருளாதாரம் சரிசை சந்தித்த போதிலும் இந்த ஹெனான் மைன் நிறுவனம் பெரும் லாபத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் (சுமார் ரூ.11 ஆயிரத்து 86 கோடி) ஆக இருந்தது. இதனால் மகிழ்ச்சியில் திகைத்துப்போன அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு போனஸை வழங்க முடிவு செய்தது.
அதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடி செய்து, சிறப்பாக செயல்பட்ட 40 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 61 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.73 கோடியே 81 லட்சம்) மதிப்புடைய பணக்கட்டுகள் 3 மீட்டர் உயரத்திற்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் (சுமார் ரூ.6 கோடி) போனசாக வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா 1 மில்லியன் யுவான் (சுமார் ரூ.1.20 கோடி) வழங்கப்பட்டது.
இது தவிர நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 லட்சம் வரை பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2.3 பில்லியன் வரை விற்பனையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.