ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்கா மீது சரமாரி குற்றச்சாட்டுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா!

அமெரிக்கா மீது சரமாரி குற்றச்சாட்டுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  அமெரிக்க - சீனா இடையே மோதல் அதிகரித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடிப் போக்கே காரணம் என சீனா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சீன அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் புகார்களை வரிசையாக பட்டியலிட்டுள்ளது. 

  சீனா மற்றும் அமெரிக்கா இடையே பொருளதாதார ரீதியிலான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மீது வரிசையாக குற்றச்சாட்டுகளை அடுக்கி, சீனா ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வந்தாலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் மோதல் அதிகரித்துள்ளது. ரஷ்யாவுடன், சீனா நட்புறவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். சீனாவின் வர்த்தக ரீதியான அணுகுமுறை தவறாக இருப்பதாகக் கூறி 267 பில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத் தடை விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். அதன் துவக்கமாக, 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. 2019 ஜனவரி முதல், சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 60 பில்லியன் டாலர் அளவிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வரி விதிக்க சீனா முடிவெடுத்துள்ளது. அத்துடன், சீனாவுக்கான அமெரிக்க தூதரையும் நேரில் அழைத்து கண்டித்தது. இந்நிலையில், அமெரிக்காவுடனான மோதல் குறித்து சீனா வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  சீன மொழியில் 36 ஆயிரம் எழுத்துக்களில் ஆறு பகுதிகளாக அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், உலகின் வளரும் நாடுகளில் சீனா மிகப்பெரியது என்றும், உலகின் மிகவும் அதிகம் வளர்ந்த நாடு அமெரிக்கா என்றும் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு அமெரிக்கா - சீனாவுக்கு மட்டுமின்றி. உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானதென சீனா தெரிவித்துள்ளது.

  இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை சீர்படுத்த பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவை முன்னிறுத்தி டிரம்ப் செயல்படத் தொடங்கியதும், இருதரப்பு சுமூக உறவை மீறும் வகையில் நடந்ததுமே கருத்துவேறுபாடுக்கு முக்கிய காரணம் என அதில் கூறியுள்ளது.

  அமெரிக்காவுடனான உறவை சுமூகமாக தொடர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அமெரிக்கா அவற்றை புறந்தள்ளி, மோதல் போக்கை தொடர்வதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது. இருநாட்டு அரசுகளும், இரு நாட்டு மக்களும் காலம் காலமாக வளர்த்து வந்த உறவை டிரம்பின் நடவடிக்கைகள் சிதைத்துவிட்டதாகவும் சீனா புகார் கூறியுள்ளது.

  இரு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி இரு வேறு கட்டங்களில் இருப்பதால் மோதல் ஏற்படுவது இயற்கையே என்றும் அவற்றை சரி செய்ய இருதரப்பு நம்பிக்கை, ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம் என்றும் சீனா கூறியுள்ளது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: China Accuses US, President Donald Trump, War between us and china