Home /News /international /

கெட்டவர்களிடம் துப்பாக்கி உள்ளதா? நல்லவர்களுக்கும் துப்பாக்கிகளைக் கொடு: அமெரிக்காவின் துப்பாக்கித் தத்துவம்

கெட்டவர்களிடம் துப்பாக்கி உள்ளதா? நல்லவர்களுக்கும் துப்பாக்கிகளைக் கொடு: அமெரிக்காவின் துப்பாக்கித் தத்துவம்

உவால்டே பள்ளி துப்பாக்கிச் சூட்டில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் குழந்தைகள்

உவால்டே பள்ளி துப்பாக்கிச் சூட்டில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் குழந்தைகள்

10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சாண்டி ஹூக் எலிமெண்டரி ஸ்கூல் தாக்குதலில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடந்து 22 குழந்தைகள் 4 பெரியோர் உட்பட 26 பேர் பலியானதிலிருந்து துப்பாக்கி விற்பனை கெடுபிடி பற்றி அமெரிக்க அதிகார வட்டாரங்களில் தினம் தினம் பேசப்பட்டு வந்தாலும் ஒன்றும் விடிவு ஏற்படவில்லை. இப்போது என்னாயிற்று? அன்று டெக்ஸாசில் உவால்டேயில் பள்ளிக்கூடத்தில் பாலகர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் 2 பெரியோர் உட்பட 21 பேர் பலியாகியுள்ளனர். உடனே மீண்டும் துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் எனும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

உவால்டே சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன் நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நிறவெறி கொலை வெறி துப்பாக்கிச் சூட்டில் 10 கருப்பரின கடைக்காரர்கள் பலியாகினர். உவால்டே சம்பவம் இந்த ஆண்டு நடந்த 27வது காட்டுமிராண்டி சம்பவமாகும். வெகுஜன துப்பாக்கிச்சூடு என்பது ஒரு அமெரிக்காவுக்கே பிரத்யேகமானதாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் இறுக்கப்பட்டவுடன் மாஸ் ஷூட்டிங் தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலும் பலியாவது கருப்பரினத்தைச் சேர்ந்தவர்களே. துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரிப்பவர்கள் மனநோய் தான் காரணம் என்று கூறித் தப்பித்துக் கொள்கின்றனர்.

அமெரிக்காவில் மட்டும்தான் உலகிலேயே மக்கள் தொகையைக் காட்டிலும் துப்பாக்கிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விவரங்கள். 393.3 துப்பாக்கிகள் அங்கு உள்ளன, அதாவது 100 பேருக்கு 120.48 துப்பாக்கி உள்ளன என்ற விகிதாச்சாரத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அனைவரிடமும் துப்பாக்கி இருப்பதால் நம்மிடம் இருப்பது தான் பாதுகாப்பு என்று மக்கள் நினைக்கின்றனர்.

துப்பாக்கி வைத்து கொள்வதை ஆதரிக்கும் பாரம்பரியவாதிகளோ, துப்பாக்கி வைத்திருக்கும் கெட்டவனிடமிருந்து மக்களை காப்பாற்ற நல்லவர்களிடமும் துப்பாக்கி இருக்க வேண்டும் என்கின்றனர். இதில் பயங்கரம் என்னவெனில் ஆயுதக் காவலர்கள், போலீசாரால் கூட துப்பாக்கியால் சுடுபவனை அடக்க முடியவில்லை என்பதுதான்.

அமெரிக்க மூளையிலும் மரபிலும் துப்பாக்கியும் வன்முறையும் ஆழமாக பதிந்துள்ளது. மக்களின் அடையாளமே துப்பாக்கியில்தான் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். “ஒரு சுதந்திர நாட்டின் பாதுகாப்புக்கு மக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது கட்டாயம், மக்களின் இந்த உரிமையை தடுக்கக் கூடாது என்கிறது சட்டம். ஒருநாட்டின் சட்டமே இந்த லட்சணத்தில் இருந்தால், எந்தப் பாதுகாப்புக்காக அவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஆதரிக்கிறார்களோ அதே துப்பாக்கிக் கலாச்சாரம் தான் அந்த நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

ஒருபுறம் இது தனிநபர் மனநிலை பொறுத்த விஷயம் என்கின்றனர், மறுபுறம், ஒழுக்கம் அறம் சார்ந்த பிரச்சனை என்கின்றனர், இன்னும் சிலர் பெரும் தீமையை சட்டம் போட்டு அடக்கி விட முடியாது என்கின்றனர். நேஷனல் ரைபிள் அசோசியேஷன் அங்கு துப்பாக்கிகளுக்கு பெரிய லாபி அமைப்பாகும். இவர்களைப் பகைத்துக் கொண்டு அங்க் ரிபப்ளிக்கும் ஆட்சி செய்யமுடியாது, ஜனநாயகக் கட்சியும் ஆட்சி செய்ய முடியாது. என்ன சட்டம் கொண்டு வந்தாலும் இந்தியாவில் எப்படி சாலை விதிமீறல்களையும் விபத்துகளையும், விபத்து மரணங்களையும் கட்டுப்படுத்தாதோ அதே போல்தான் அமெரிக்காவில் துப்பாக்கிச் கலாச்சாரம் வேரூன்றி விட்டது, இனி எந்த ஒரு சட்டத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அங்குள்ள சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
Published by:Muthukumar
First published:

Tags: Gun shoot, USA

அடுத்த செய்தி