உலகம் முழுவதும் உயிரிழப்புகள் பதிவாகி வருவதால் இனியும் ஒமைக்ரான் வைரஸை லேசாகக் கருதுவது தவறானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது, உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவிவருகிறது. பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்டா வைரஸ் மாறுபாட்டை அடக்கி இதன் பரவல் மேலோங்கி வருகிறது.
டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் கூட முற்றிலுமாகவே இந்த வைரஸை மிதமானது என்று வகைப்படுத்திவிடக்கூடாது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை ஒப்பிடும்போது சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், இதற்கு முந்தைய திரிபுகளைப் போல் ஒமைக்ரானாலும் மக்கள் அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதியாகிறார்கள். உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
Also read: விரைவில் பூமியை கடக்க உள்ள சிறுகோள் - இதன் நகர்வில் சின்ன மாற்றம் என்றாலும் பூமிக்கு ஆபத்தாம்!
உண்மையில் சொல்ல வேண்டுமானால், சுனாமி போல் உலகை ஒமைக்ரான் அச்சுறுத்தி மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 9.5 மில்லியன் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரம் பதிவான கொரோனா தொற்றைவிட 71 சதவீதம் அதிகமாகும்.
தொடர்ந்து, தடுப்பூசி சமத்துவமின்மை குறித்துப் பேசிய டெட்ரோஸ் அதோனம், வளர்ந்த நாடுகள் கடந்த ஆண்டு கிடைத்த தடுப்பூசி அளவுகளை பயன்படுத்திய விதம் குறித்து விமர்சித்த அவர், அவை புதிய வகை வைரஸ்கள் உருவாவதற்கு சரியான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனால், 2022ம் ஆண்டில் புத்திசாலித்தனமாக உலக நாடுகள் தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் 2021 இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40% மக்களாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ள 194 நாடுகளில் 92 நாடுகள் இந்த இலக்கை எட்டவில்லை. 36 நாடுகள் 10% மக்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்தவில்லை. இனி 2022ல் ஒவ்வொரு நாட்டிலும் 70% மக்களாவது முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.