‘பயங்கரவாதத்தின் அடையாளம்’.. புர்கா அணிய தடை.. மதராஸாக்கள் மூடப்படும்.. இலங்கை அமைச்சர் அதிரடி!

புர்கா

2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகளில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். இதனால் 260க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு புர்கா அணிவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

  • Share this:
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுவதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதராஸாக்கள் மூடப்படும் என்று பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்தார்.

புத்த மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகளில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். இதனால் 260க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு புர்கா அணிவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்ச பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிலையில் இலங்கையின் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், முஸ்லிம் பெண்கள் முகத்தை முற்றிலும் மறைக்கும் வகையில் புர்கா அணிவதற்கு நிரந்தரத் தடை விதிப்பதற்கான கோப்புக்களில் தான் கையெழுத்திட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆரம்ப நாட்களில் முஸ்லிம் பெண்கள் யாரும் புர்கா அணியவில்லை. இது சமீபத்தில் வந்த மத தீவிரவாதத்தின் அடையாளம். இதனை நிச்சயமாக தடை செய்யத்தான் போகிறோம் என்றார்.

மதராஸாக்கள் மூடல்:

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மதராஸாக்கள் விரைவில் மூடப்படும் எனவும் அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்தார்.

யாரும் தாங்களாகவே பள்ளிகளை தொடங்கி அவர்களின் இஷ்டத்துக்கு தேவையானதை கற்பிக்க முடியாது, அரசின் கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்டே கல்வி பயில வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார். மேலும் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பெரும்பாலும் அரபிக் மற்றும் குரானை மட்டுமே கற்பித்துக் கொண்டிருக்கின்றன இது தவறானது என குறிப்பிட்டார்.
Published by:Arun
First published: