சூழலியல் பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்றம், உலகச் சுற்றுச்சூழல் சீரழிவு, இதனால் அழியும் ஏழைநாட்டு வளங்கள் என்று எந்த ஒரு சுய உணர்வும் இல்லாத அதிபர் போல்சனாரோவின் ஆட்சியில் அமேசான்
மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 10,000 கிமீ-க்கும் கூடுதலாக அழிக்கப்பட்டுள்ளது.
அதாவது முந்தைய ஆண்டை விட பிரேசில் கொள்கைகளினால் அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22%. கடந்த 12 மாதங்களில் சுமார் 13,325 சதுர கிமீ மழைக்காடுகள் பிரேசிலினால் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு கண்காணிப்பு அமைப்பு பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரை 13,325 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது 15 ஆண்டுகளில் மிக மிக அதிக அழிப்பு என்பதோடு ஐநா சுற்றுசூழல் சந்திப்பில் பிரேசில் அதிபர் அளித்த வாக்குறுதியிலும் பின் வாங்கியதைக் காட்டுகிறது.
2019-ஜனவரியில் பிரேசிலின் அதிபராக போல்சனாரோ பதவியேற்ற பிறகே இவ்வளவு அழிப்பு, இதற்கு முன்பும் குறைவில்லை 10,000 சதுர கிமீ அமேசான் மழைக்காடுகள் ஆண்டு ஒன்றுக்கு அழிக்கப்பட்டு வந்துள்ளன. 2009 முதல் 2018 வரை ஆண்டுக்கு 6,500 சதுர கிமீ அமேசான் காடுகள் அழிக்கப்பட்டன. அதிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 11,405 சதுர கிமீ பரப்பு அழிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் அளவுக்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பிரேசில் என்.ஜி.ஓ அமைப்பு கூறும்போது, “வெட்கக்கேடு, பெரிய குற்றம். சுற்றுச்சூழல் அழிப்பை தங்கள் அரசின் கொள்கையாகவே வைத்திருக்கும் போல்சனாரோ ஆட்சியின் கொடுமை இது. அமேசான் மழைக்காடுகள் அழிவதனால் காத்திருக்கும் ஆபத்தை உணராமல் செய்யும் அராஜகம்” என்று சாடியுள்ளனர்.
‘வளர்ச்சி’ என்ற மாயையை அங்கும் போல்சனாரோ முன்னெடுத்தார், அமேசானை வளர்க்கப்போகிறோம் என்றார், அது அமேசான் அழிப்பு என்று உலகம் கதறியும் அவர் காதுகளில் விழவில்லை என்கின்றனர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்கள். நில அபகரிப்பு மாஃபியாக்களுக்கு ஓபன் லைசென்ஸ் வழங்கினார் போல்சனாரோ. யுஏஇயில் வந்து பிரேசிலில் முதலீடு செய்யுங்கள் என்று கேட்ட போல்சனாரோ, அமேசான் காடுகளை அழிப்பதற்காக பிரேசிலை விமர்சிப்பது தவறு என்கிறார். அமேசானின் பெரும்பகுதி காப்பாற்றப்பட்டு வருகிறது என்று ஒரு முழுப்பொய்யை சொன்னார் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் சாடுகின்றனர்.
வெளிநாடுகளில் சென்று இனிக்க இனிக்க பேசும் போல்சனாரோ உண்மையில் அமேசான் காடுகளை அழித்து வருகிறார் என்று இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்ட அமைப்பு சாடியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.